எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிப்பு..!

இந்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து, 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது. 150 படுக்கை கொண்ட தொற்று நோய்ப் பிரிவு ஒன்றை துவக்குவது என்ற புதிய முடிவின் காரணமாக திட்ட மதிப்பீடு ரூ.1264 கோடியில் இருந்து ரூ 1977.8 கோடியாக உயர்த்தப்பட்டது.
அதன்பின்னர், ஜெய்காவுடன் கடனுக்கான ஒப்பந்தம் 2021 மார்ச்சில் கையெழுத்தானது. மொத்த நிதித் தேவையான ரூ.1977.8 கோடிகளில் 82% சதவீத தொகையான ரூ1627.70 கோடிகளை ஜெய்கா நிறுவனம் மூலம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் 2026க்குள்ளாக எய்ம்ஸ் பணிகள் முடிக்கப்படுமென்று ஒப்பந்தம் தெரிவித்த நிலையில், ஜெய்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கட்டுமான பணிக்காக வெளியிடப்பட்டுள்ள டெண்டரில் 33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும், 18 செப்டம்பருக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.