1. Home
  2. தமிழ்நாடு

கோவில் காவலாளி அஜித் குமார் வழக்கு.. பாதிக்கப்பட்ட மற்ற 7 பேருக்கும் இழப்பீடு - நீதிமன்றம் அதிரடி!

1

திருப்புவனம் காளி கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், பாதிக்கப்பட்ட மற்ற ஏழு பேருக்கும் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அஜித் குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு, உயர்நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மாரிஸ் குமார் இந்த தகவலை தெரிவித்தார்.திருப்புவனம் காளி கோவில் காவலாளியாக இருந்தவர் அஜித் குமார். இவர் காவல்துறையினரால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கறிஞர் மாரிஸ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "அஜித் குமார் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது" என்று கூறினார். முந்தைய விசாரணையில், இந்த வழக்கின் ஆவணங்களை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சி.பி.ஐ இந்த வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

மேலும், முந்தைய விசாரணையின்போது அரசு தரப்பில் எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதே இந்த வழக்கின் முக்கிய நோக்கம் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, அரசு தரப்பில் இன்று ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 3 சென்ட் நிலமும், அரசு வேலையும் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


 

இதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்டினோம். ஜம்மு காஷ்மீரில் நடந்த ஒரு வழக்கில், காவல்துறையின் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பதிவு செய்தனர். அஜித் குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்க உத்தரவிட்டனர். ஏற்கனவே கொடுத்த ரூ.7.5 லட்சத்தை கழித்துவிட்டு, மீதி ரூ.17.5 லட்சத்தை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் பணம் இல்லையா அல்லது மனமில்லையா என்று தெரியவில்லை. நீதிமன்றம் இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சத்தை வழங்க உத்தரவிட்டுள்ளது.அதுமட்டுமின்றி, அஜித் குமார் கொலை வழக்கில் சித்திரவதைக்கு ஆளான மேலும் 7 நபர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கான இழப்பீட்டுச் சட்டம் 2018" அடிப்படையில் மாவட்ட நீதிபதிக்கு மனு கொடுக்க வேண்டும். மனு செய்த நாளில் இருந்து ஏழு வார காலத்திற்குள் மாவட்ட நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.ஐ விசாரணையை தொடர்ந்து உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என வழக்கறிஞர் மாரிஸ் குமார் தெரிவித்தார்.இந்த உத்தரவின் மூலம், அஜித் குமார் குடும்பத்திற்கும், சித்திரவதைக்கு ஆளான மற்றவர்களுக்கும் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like