5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்..!
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெயில் காரணமாக வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை அடுத்து, இன்று இயல்பைவிட கூடுதலாக 4 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உணர முடிந்தது. இதையடுத்து, மதியம் 12 மணி முதல் 3 மணி வரையில் பொதுமக்கள் பெரும்பாலும் வெளியில் வராமல் வீடுகளில் முடங்கினர்.
குறிப்பாக வேலூரில் இன்று 108 டிகிரி வெயில் நிலவியது. கரூர் பரமத்தி, திருச்சி, சேலம், மதுரை, ஈரோடு, தர்மபுரியில் 106 டிகிரியாக இருந்தது. திருத்தணியில் 104 டிகிரி வெயில் நிலவியது. இதர உள் மாவட்டங்களை பொறுத்தவரையில் சமவெளிப் பகுதிகளில் 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெயில் நிலவியது. தமிழக கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 90 டிகிரி முதல் 102 டிகிரி வரை இருந்தது. சென்னை மீனம்பாக்கத்தில் 102 டிகிரி இருந்தது. நுங்கம்பாக்கத்தில் 99 டிகிரி நிலவியது.
இதற்கிடையே, தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக நாளை (21ம் தேதி) முதல் 23ம் தேதி வரையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 24 மற்றும் 25ம் தேதிகளில் தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவும். அதன் காரணமாக சில இடங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையவும் வாய்ப்புள்ளது. அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்்களில் அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது.