தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து..!

பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ம் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க. 10 இடங்களிலும் போட்டியிட்டது.
வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே தெலுங்கு தேசம் - பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் இருந்து வந்த நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து தெலுங்கு தேசம் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் ஆந்திராவில் ஆட்சியை பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஆட்சிக் காலங்களில் நீங்கள் செயல்படுத்திய திட்டங்களும், 2024 தேர்தலில் மக்களுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதிகளும் உங்கள் தலைமையிலான அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளன. ஆந்திர மக்களுக்கு நல்லாட்சி வழங்க எனது வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.