தன்னை கைது செய்தது தவறானது - டெலிகிராம் நிறுவனர்..!
ஐரோப்பிய நாடான அசர்பைஜானில் இருந்து பிரான்சின் பாரிஸ் விமான நிலையம் வந்திறங்கிய டெலிகிராம் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், 39, கடந்த ஆகஸ்ட் 24ல் கைது செய்யப்பட்டார். ரஷ்யாவைச் சேர்ந்தவரான துரோவ், பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவில் இரட்டை குடியுரிமை பெற்றவர். இந்நிலையில், தனது முதல் எதிர்ப்பை துரோவ் பதிவிட்டுள்ளார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரான்சில் என்ன நடந்தது என்பதை நான் இன்னும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். டெலிகிராமில் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் உள்ள மில்லியன் கணக்கான பதிவுகளை தினமும் நீக்குகிறோம். என்னை கைது செய்தது தவறானது. இது ஆச்சரியமாக இருக்கிறது. டெலிகிராம் அராஜகத்துடன் செயல்படுகிறது என சில ஊடகங்களில் கூறப்படுவது முற்றிலும் பொய்யானது. தினசரி வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை வெளியிடுகிறோம்.
பிரான்ஸ் அதிகாரிகள் பல வழிகளில் உதவி செய்தனர். நான் துபாயில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு அடிக்கடி விருந்தினராக இருந்தேன். பிரான்சில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. ஒரு நாடு இணைய சேவையில் அதிருப்தி அடைந்தால், அந்த சேவைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தற்போதுள்ள விதி.
ஸ்மார்ட்போனுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த சட்டங்களைப் பயன்படுத்தி, மூன்றாம் தரப்பினரால் செய்யப்படும் குற்றங்களுக்கு தலைமை நிர்வாக அதிகாரி மீது குற்றம் சாட்டுவது தவறான அணுகுமுறையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.