டெலிகிராம் நிறுவனருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை!
வாட்ஸப் போல கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் உலகம் முழுதும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுகிறது. பணப்பரிமாற்ற மோசடி, போதை பொருள் கடத்தல் போன்ற செயல்பாடுகளுக்கான களமாக டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதாக பலராலும் குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டு கோர்ட்டுகளில் இருந்து அனுப்பிய சம்மன்களுக்கு டெலிகிராம் சார்பில் பதில் தரப்படுவதே இல்லை என்றும் புகார் உள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான அஜர்பைஜானில் இருந்து பிரான்சின் பாரிஸ் விமான நிலையம் வந்திறங்கிய டெலிகிராம் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், 39, கடந்த 24ல் கைது செய்யப்பட்டார். ரஷ்யாவைச் சேர்ந்தவரான துரோவ், அந்நாட்டு அரசு நெருக்கடி கொடுத்ததால் பிரான்ஸ் குடியுரிமை பெற்று சில ஆண்டுக்கு முன் குடியேறினார்.
இத்தகைய சூழ்நிலையில் தான், துரோவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு, உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எக்ஸ் சமூகவலைதள அதிபர் எலான் மஸ்க், அமெரிக்க அரசு ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடென் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் துரோவை கைது செய்துள்ள பிரான்ஸ் அரசு, அவர் நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் ஜாமின் பெறுவதற்கான பிணைத்தொகையாக, 46 கோடி ரூபாய் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது. ஜாமின் பெற்றாலும், நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தான் அவர் இருப்பார்; வாரத்தில் இரண்டு முறை போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் செயலி மூலம், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் வெளியிட அனுமதித்ததாகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு வழிவகை செய்து விட்டதாகவும், துரோவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.