ஜிபிஎஸ் சொதப்பியதால் சவுதி பாலைவனத்திற்கு போன இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலரும் வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில் செல்கிறார்கள்.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள ரப் அல் காலி என்ற பாலைவனத்தில் தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் நீரிழப்பு மற்றும் சோர்வு காரணமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த அந்த நபர் ஹைதராபாத்தின் கரீம் நகரை சேர்ந்த முகமது ஷெஹ்சாத் கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் சவுதி அரேபியாவில் உள்ள பிரபல டெலிகாம் நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். உலகின் மிக ஆபத்தான பாலைவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரப் அல் காலி பாலைவனத்தில் சிக்கித் தவித்துள்ளார்.
இந்த ரப் அல் காலி பாலைவனம் சுமார் 650 கிலோமீட்டருக்கு பரந்து விரிந்து கிடக்கும் பிரம்மாண்ட பாலைவனமாகும்.
முகமது ஷெஹ்சாத் கான் தன்னுடன் பணியாற்றும் சூடான் நாட்டை சேர்ந்த ஒருவருடன் இந்த பாலைவனத்திற்குச் சென்றுள்ளார். அங்கே நடு வழியில் இவரது ஜிபிஎஸ் சிக்னல் செயலிழந்து உள்ளது. இதனால் எப்படிச் செல்வது என்று தெரியாமல் அவர்கள் குழம்பி போய் இருக்கிறார்கள். அவர்கள் குழப்பத்தில் தள்ளாடிக் கொண்டு இருக்கச் சரியாக அந்த நேரம் பார்த்து ஷெஹ்சாத்தின் மொபைலிலும் பேட்டரி காலியாகி ஸ்விட்ச் ஆப் ஆகியிருக்கிறது.
இதனால் அவர்களால் உதவிக்கும் யாரையும் அழிக்க முடியவில்லை. இருப்பினும், எப்படியாவது பாலைவனத்தைத் தாண்டிவிடலாம் என்று நினைத்த அவர்கள் தொடர்ந்து வண்டியை ஓட்டியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வண்டியில் எரிபொருளும் தீர்ந்துள்ளது. இதனால் அவர்கள் பாலைவனத்திலேயே சிக்கியுள்ளனர். உணவும், தண்ணீரும் இல்லாமல் அவர்கள் பாலைவனத்தில் சிக்கி தவித்தனர்.
வெப்பம் உச்சத்தில் இருந்த நிலையில், அவர்கள் அங்கேயே அலைந்து திரிந்துள்ளனர். இருப்பினும், கடுமையான நீரிழப்பு மற்றும் சோர்வு காரணமாக இருவரும் பாலைவனத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இருவரும் மாயமான நிலையில், தேடும் பணிகளை அதிகாரிகள் தொடங்கிய நிலையில், சுமார் நான்கு நாட்களுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை அவர்கள் உடல்களை மீட்டுள்ளனர்.