தாறுமாறாக காரை ஒட்டியதில் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு..!

சென்னை பெசன்ட் நகர் அருகே ஊர்க்குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபர் சூர்யா (வயது 22). இவர் நேற்று முன்தினம் இரவு பெசன்ட் நகர் டைகர் வரதராச்சாரி சாலையோரத்தில் உள்ள பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக கார் ஒன்றை பெண் ஒருவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்த தறிகெட்டு ஓடிய அந்த கார் பிளாட்பார்மில் ஏறியது. இதில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் சூர்யா மீது கார் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த சூர்யா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.விபத்தை ஏற்படுத்தியதும் அங்கிருந்து அந்த பெண் காரோடு தப்பி சென்றார். இதற்கிடையே அந்த வழியாக வந்தவர்கள் சூர்யாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சூர்யா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் விபத்து தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், பெண் ஒருவர் சொகுசு காரில் வேகமாக வந்ததாகவும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தியது ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி பீடா மஸ்தான் ராவீன் மகள் பீடா மாதுரி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ய விரைந்தனர் இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.