வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை...
மைசூரை சேர்ந்த 19 வயது இளம் பெண் வேலை தேடி சென்னை வந்துள்ளார். பின்னர் சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது தோழியின் வீட்டிற்குச் சென்று தங்கி விட்டு, மைசூர் செல்வதற்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அப்பெண்ணிடம் பழக்கமில்லாத ஒரு நபர் வேலை வாங்கி தருவதாகப் பேச்சுக் கொடுத்துள்ளார். மேலும் வேலை கிடைக்கும் வரை அரும்பாக்கத்தில் உள்ள தனது தோழி வீட்டில் இருக்குமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய அப்பெண், அரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் தங்குவதற்காக சென்றுள்ளார்.
அங்கு சென்றதும் இளம்பெண்ணை அடைத்து வைத்த அந்த நபர், பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபருக்கு அவரது தோழியும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து செல்போன் மூலம் காவல்துறையின் அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்ட இளம் பெண், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக தகவல் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கோயம்பேடு மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அப்பெண்ணின் இருப்பிடம் சென்று, அவரை அதிரடியாக மீட்டனர். இதைத் தொடர்ந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் நபரையும், அவரது தோழியும் கைது செய்தனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள நபர் வேலூர் வாலாஜா பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (32) என்பதும், அவர் சென்னையில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. மேலும் சதீஷ்குமாருக்கு உடந்தையாக இருந்தது மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஷகிலா (33) என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.