டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் இளம்பெண் ஆடையை கழற்ற சொல்லி அட்டூழியம்..!
இணையவழி மோசடி கும்பல் அதிகரித்து வரும் நிலையில், சமீப காலமாக "டிஜிட்டல் கைது" எனப்படும் சைபர் குற்றங்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மத்திய அரசின் விசாரணை அதிகாரிகள் போன்றவராக தங்களை காட்டிக்கொள்ளும் இந்த மர்ம நபர்கள், ஆடியோ மற்றும் வீடியோ வழியாக அப்பாவி மக்களை தொடர்பு கொண்டு மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 26 வயது இளம் பெண் ஒருவர், மர்ம நபர்களால் டிஜிட்டல் கைது செய்யப்பட்டு, அவரை ஆடைகள் கழற்றுமாறு கூறி அட்டூழியம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
"உங்களை விரைவில் கைது செய்வோம்" என்று மிரட்டிய அந்த மர்ம நபர்களிடம், அந்த பெண் தனக்கும் இந்த மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கெஞ்சி கேட்டுக்கொண்ட போதிலும், அவர்கள் தொடர்ந்து பயமுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண்ணை மிரட்டி சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பறித்ததாகவும் தெரிகிறது.
முழு உடல் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி, ஆடைகளை கழற்றுமாறு அந்த பெண்ணை மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.