1. Home
  2. தமிழ்நாடு

ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்திய அணி..!

1

சீனாவில் கடந்த செப்டம்பர் 8 முதல் ஆசிய சாம்பியன்ஸ் ட்ரோபி ஹாக்கி தொடர்,துவங்கி நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இந்தியா, கொரியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா என 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த ஹாக்கி தொடரில், ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களமிறங்கிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி, தனது முதல் போட்டியில் சீனாவை எதிர்கொண்டது. அப்போட்டியில் 3-0 என இந்தியா வெற்றி பெற்றது.2வது போட்டியில், இந்திய அணி ஜப்பானை எதிர்கொண்டது. அந்த போட்டியிலும் 5-1 என இந்தியா வெற்றி வாகை சூடியது.

இந்நிலையில், செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற ஆட்டத்தில், தனது 3வது போட்டியில் இந்திய அணி மலேசியா அணியை எதிர்கொண்டது.இந்த போட்டியில், துவக்கத்தில் இருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பகுதியின் 3வது நிமிடத்திலேயே, ராஜ் குமார் பால் ஒரு கோல் அடித்து, இந்தியாவின் கோல் கணக்கை துவங்கி வைத்தார்.

6வது நிமிடத்திலேயே அரைஜீத் சிங் இந்தியாவின் 2வது கோலை அடித்தார். தொடர்ந்து, 6வது நிமிடத்தின் இறுதியில் கிடைத்த பேனால்டி கார்னரை ஜுக்ராஜ் சிங் கோலாக மாற்ற, முதல் பகுதியின் முடிவில் இந்தியா 3-0 என முன்னிலை பெற்றிருந்தது.

2வது பகுதியின் 7வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த மற்றொரு பெனால்டி கார்னரை, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் தடுப்புகளை கிழித்து கோலாக மாற்றினார். தொடர்ந்து, 10வது நிமிடத்தில் இந்தியாவுக்காக இந்த ஆட்டத்தில் தனது 2வது கோலை ராஜ் குமார் பால் அடித்தார். இதன்மூலம், ஆட்டத்தின் பாதி நேர முடிவில் இந்தியா 5-0 என முன்னிலை பெற்றிருந்தது.

3வது பகுதியிலும் தனது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜ் குமார் பால், அப்பகுதியின் 3வது நிமிடத்திலேயே இன்னொரு கோலை அடித்தார். அவருக்கு போட்டியாக, 9வது நிமிடத்தில் அரைஜீத் சிங் இப்போட்டியில் தனது 2வது கோலை அடித்தார். தொடர்ந்து 10வது நிமிடத்தில் உத்தம் சிங் இந்திய அணியின் 8வது கோலை அடித்தார்.

3வது பகுதியின் 4வது நிமிடத்தில், மலேசியா அணிக்காக அகிமுல்லா அனுர் ஒரு கோல் அடிக்க, அப்பகுதியின் முடிவில் 8-1 என இந்தியா அதிரடி முன்னிலை பெற்றிருந்தது.4வது மற்றும் கடைசி பகுதியில் இரண்டு அணிகளுமே கோல் அடிக்காத நிலையில், 8-1 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

மேலும், இதன்மூலம் இந்த தொடரில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. விளையாடிய 3 போட்டிகளும் வெற்றி பெற்றுள்ள இந்தியா, 9 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தலா 5 புள்ளிகளுடன், கொரியா 2வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 3வது இடத்திலும் உள்ளன.

இந்தியா தனது அடுத்த போட்டியில் கொரியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி செப்டம்பர் 12 அன்று நடைபெறவுள்ளது. தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், செப்டம்பர் 14 அன்று இந்தியா விளையாட உள்ளது.

Trending News

Latest News

You May Like