1. Home
  2. தமிழ்நாடு

ஆசிரியர்களின் வேலை பாதுகாக்கப்படும் : நான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலை இழக்க மாட்டார்கள்: மம்தா பானர்ஜி!

1

மேற்குவங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நியமனம் செல்லாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த 3ம் தேதி உறுதி செய்தது. இந்நிலையில், வேலை இழந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களைச் சந்தித்து மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உச்ச நீதிமன்ற உத்தரவால் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் வேலை பாதுகாக்கப்படும். நான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலையை இழக்க மாட்டார்கள். யார் தகுதியானவர், யார் தகுதியற்றவர் என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும். கல்வி முறையை சீர்குலைக்க யாருக்கும் உரிமை இல்லை. பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் வியாபம் வழக்கில், பலர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. நீட் தேர்வில், பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. உச்ச நீதிமன்றம் தேர்வை ரத்து செய்யவில்லை.

உச்ச நீதிமன்றம் எங்களுக்கு தெளிவுபடுத்தினால், நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இல்லையென்றால், நாங்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்து உங்களுக்கு (நியமனம் ரத்து செய்யப்பட்ட ஊழியர்கள்) ஆதரவாக நிற்போம். இரண்டு மாதங்கள் கஷ்டப்படுங்கள். 20 ஆண்டுகள் நீங்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. அந்த இரண்டு மாதங்களுக்கும் நான் இழப்பீடு வழங்குவேன். நீங்கள் பிச்சை எடுக்க வேண்டியதில்லை.

கல்வி முறையை அழிக்க ஒரு சதி நடக்கிறது. உயர்கல்விக்கான நுழைவாயில்களாக இருப்பவர்கள் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளின் ஆசிரியர்கள். நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களில் பலர் தங்கப் பதக்கம் வென்றவர்கள், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை அடைந்துள்ளனர், நீங்கள் அவர்களை திருடர்கள் என்று அழைக்கிறீர்கள். நீங்கள் அவர்களை திறமையற்றவர்கள் என்று அழைக்கிறீர்கள், உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தார்கள்? இந்த விளையாட்டை விளையாடுவது யார்?

தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டதாக தயவுசெய்து கருத வேண்டாம். நாங்கள் கல் நெஞ்சம் கொண்டவர்கள் அல்ல. இதைச் சொன்னதற்காக நான் சிறையில் அடைக்கப்படலாம். ஆனால் எனக்கு அது குறித்து கவலையில்லை. வேலை இழந்தவர்களுக்கு நான் துணை நிற்கிறேன், அவர்களின் கண்ணியத்தை மீட்டெடுக்க எல்லாவற்றையும் செய்வேன். தகுதியானவர்கள் வேலைகளை இழக்க நான் அனுமதிக்க மாட்டேன். அதோடு, உங்கள் சேவை இடைவெளி இன்றி தொடர்வதை உறுதி செய்ய எங்களிடம் தனித்தனி திட்டங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like