வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய டீக்கடை தம்பதி..!
வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இன்று காலை வரை 357 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வயநாடு நிலச்சரிவு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், வீடு, பொருள்கள், உறவினர்கள் என அனைத்தையும் இழந்து என்ன செய்வதென்றே தெரியாமல் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பல்வேறு முகாம்களில் தங்கவைப்பட்டுள்ள மக்கள் அங்கு கொடுக்கப்படும் உணவு, உடைகளைப் பெற்றுக் கொண்டு இழந்த உறவினர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் பாறைகளும், பிணக் குவியல்களும், மரண ஓலமுமே கேட்பதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகளும் உதவி செய்து வருகின்றன. இந்நிலையில், கொல்லம் மாவட்டம், பள்ளித்தோட்டத்தில் டீக்கடை நடத்தி வரும் தம்பதி தங்களது ஓய்வூதியம் மற்றும் வருமானத்தில் இருந்து சேர்த்த 10 ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் மாவட்டம், பள்ளித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுபைதா. இவரும், இவரது கணவரும் தங்களது குடும்பத்தை நடத்துவதற்காக ஒரு சிறிய டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இவர் தனது டீக்கடையில் இருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தையும், ஓய்வூதியத்தையும் சேர்த்து தன்னலமின்றி முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு 10 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ள சம்பவம் தற்போது அனைத்து தரப்பினரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து, சுபைதா கூறியதாவது: "நாங்கள் வாங்கிய கடனுக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்துவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கியில் இருந்து பணத்தை எடுத்தேன். அப்போதுதான், வயநாடு நிலச்சரிவில் சிக்கி தங்களது வீடு, உடமைகள், உறவினர்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் இழந்தவர்களுக்கு உதவ அனைவரிடமிருந்தும் பங்களிப்புகள் கேட்கப்படுவது குறித்து நாங்கள் டிவியில் பார்த்தோம்.
இதையடுத்து, அந்தப் பணத்தை உடனடியாக கலெக்டரிடம் கொடுக்கச் சொன்னார் என் கணவர். வட்டி மெதுவாகக் கூட செலுத்திக் கொள்ளலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவது இப்போது மிகவும் முக்கியம் என்றார். என்னால் வயநாட்டுக்குச் சென்று உதவ முடியாது. எனவே, நான் இங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் சென்று பணத்தை டெபாசிட் செய்தேன். மேலும், நான் பணத்தை சேகரித்து வைத்து எனக்கு ஏதாவது நேர்ந்தால் வட்டி செலுத்தவோ, அந்த தொகையைப் பயன்படுத்தி யாருக்காவது உதவவோ நிச்சயமாக முடியாது. அதனால், என்னால் முடிந்த இந்த சிறிய பங்களிப்பு சிறந்தது என நினைக்கிறேன்" என்றார். தன்னலமற்ற சுபைதா முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு (சிஎம்டிஆர்எஃப்) பணத்தை வழங்குவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே வெள்ள நிவாரணப் பணிகளுக்கு சுபைதா தனது நான்கு ஆடுகளை விற்று நிவாரண நிதி வழங்கியுள்ளதாகவும், இந்த செயலை பலர் விமர்சித்ததாகவும் கூறினார். மேலும், நான் நன்கொடை அளித்தது குறித்து கேள்விப்பட்டு பலரும் இங்கு வந்து அவர்களுக்கு ஏன் பணம் கொடுத்தீர்கள். இங்குள்ள மக்களுக்கு கொடுத்து உதவியிருக்கலாம் என்றனர். ஆனால், தற்போது இங்குள்ளவர்களுக்கு கொடுத்து உதவுவது முக்கியமா, இல்லை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பது முக்கியமா என்று சுபைதா கேள்வி எழுப்பினார்.