காரை ஒப்படைத்தால் டிடிஎப் வாசன் அதே குற்றத்தை செய்ய வாய்ப்பு உள்ளது - செக் வைத்த நீதிமன்றம்..!
யூடியூபர் டி.டி.எப் வாசன் கடந்த மே மாதம் திருச்செந்தூர் நோக்கி காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் சென்ற போது அஜாக்கிரதையாகவும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாகவும் செல்போனில் பேசிக்கொண்டே காரை ஓட்டினார்.
இதனை வீடியோவாகவும் பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பிணையில் வெளிவர முடியாத வகையில் 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் டிடிஎஃப் வாசனின் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் டிடிஎப் வாசனின் தாயார் சுஜாதா காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்புலெட்சுமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுதாரர் டிடிஎப் வாசனின் தாய் என்பது தெரியவருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் வாகனத்தை பயன்படுத்தினால் அதேபோன்ற குற்றத்தை செய்ய வாய்ப்பு இருக்கலாம் என நீதிமன்றம் கருதுவதால் காரை ஒப்படைக்க உத்தரவிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
.png)