‘தமிழ் ராக்கர்ஸ்’ அட்மின் கையும் களவுமாக கைது..!
தமிழ் ராக்கர்ஸ் குழுவின் அட்மின் ஒருவரை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். திரையரங்கில் ராயன் திரைப்படத்தை செல்போனில் பதிவு செய்த போது தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் அட்மின் ஜெப் ஸ்டீபன்ராஜ் கேரள சைபர் கிரைம் காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டார்.
மதுரை சேர்ந்த ஜெப் ஸ்டீபன்ராஜ் புதிய திரைப்படங்களை இணையங்களில் சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஏரியஸ் தியேட்டரில் படத்தை பதிவு செய்து கொண்டிருந்த போது ஜெப் ஸ்டீபன்ராஜை கேரள போலீசார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காக்நாடு சைபர் போலீசார் நடத்திய விசாரணையில் 12 பேர் இணைந்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பிரபல நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜின் மனைவி சுப்ரியா அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழ் ராக்கர்ஸ் தளம் மட்டுமின்றி டெலிகிராம் செயலியிலும் ஸ்டீபன் ராஜ் படங்களை வெளியிட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.