தற்காலிக அவைத் தலைவரானார் தமிழ்மகன் உசேன்..!

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் மதுசூதனன். இவருக்கு கடந்த 2007ம் ஆண்டு அதிமுக அவைத் தலைவர் பதவி கிடைத்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தர்ம யுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன் இருந்தார்.
இதனால், அவரை பதவியில் இருந்து நீக்குவதாக அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார். பின்னர், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்தன. இதைத் தொடர்ந்து, மதுசூதனன் மீண்டும் அவைத் தலைவரானார்.
இந்த சூழலில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மதுசூதனன் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து, அதிமுக அவைத் தலைவர் பதவி காலியானது. அடுத்த அவைத்தலைவர் யார் என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்த பதவியை கைப்பற்ற அதிமுக சார்பில் பல்வேறு சீனியர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக, அவைத் தலைவர் பதவிக்கான போட்டியில் அதிமுகவின் முக்கிய புள்ளிகளான செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செம்மலை, ஜெயக்குமார், அன்வர் ராஜா மற்றும் தமிழ் மகன் உசேன் போன்றவர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் புதிய திருப்பமாக, அவைத் தலைவர் பதவிக்கு இஸ்லாமியர் ஒருவரை நியமிக்க அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. அதாவது, ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகிய இருவருக்கும் மிகவும் நெருக்கமானவராகவும், எம்ஜிஆர் காலத்து சீனியருமான தமிழ்மகன் உசேனை அதிமுக அவைத் தலைவராக நியமிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. அதேவேளையில், அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதனிடையே, கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால், அன்வர் ராஜாவை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக தலைமை உத்தரவிட்டது.
இந்த நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், அதிமுகவில் நிலவி வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.