1. Home
  2. தமிழ்நாடு

4.5 ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் பாஜகவில் உறுப்பினராக இணைந்துள்ளார் தமிழிசை..!

1

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன். அந்த கட்சியின் கொள்கைகள் மீது தீவிர பற்று மிக்கவர். ஆனால் அவரது மகளும் மருத்துவருமான தமிழிசைக்கு பா.ஜ.கவின் கொள்கைகள் மீதுதான் விருப்பம். எனவே 1999-ம் ஆண்டு பா.ஜ.கவில் தன்னை இணைத்துக்கொண்டார். இன்று அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தாலும், எல்.முருகன் வேல்யாத்திரை நடத்தி இருந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.கவை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் தமிழிசையின் பங்கும் மிக முக்கியமானது. குறிப்பாக அவர் மேற்கொண்ட 'தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்' என்ற வாக்கியம், தமிழ்நாட்டில் பா.ஜ.க குறித்த பேச்சுக்கு வழிவகை செய்து கொடுத்தது.

இதையடுத்து அவர்க்கு மாநில பொதுச்செயலாளர், துணைத் தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டன. இறுதியாக தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் பதவியையும் கொடுத்து அழகு பார்த்தது, டெல்லி. கட்சி பணிகளில் சிக்ஸர் அடித்தவருக்கு தேர்தலில் மட்டும் சறுக்கலையே சந்தித்து வந்தார். ராமநாதபுரம் தொகுதியில் 2006, 2011, 2009 தேர்தல்களில் தோல்விதான் கிடைத்தது. கடந்த 2019 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நின்றவர் முடிவை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் தி.மு.க வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றுவிட்டார். இதனால் வருத்தத்தில் இருந்தவருக்கு தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பு கொடுத்தது டெல்லி. பிறகு புதுவை துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழிசை கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்து அரசியல் வாழ்க்கைக்கு திரும்பப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தனது 2 மாநில கவர்னர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பினார். அவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் அரசியல் வாழ்க்கைக்கு திரும்பினார்.

இந்த நிலையில்,தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வழங்கினார்.நான்கரை ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் பாஜகவில் உறுப்பினராக இணைந்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், சற்றுமுன் கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் உறுப்பினராக இணைந்துள்ளார். அவர் தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like