மகளிர் உரிமை தொகை பெயரில் 1000 ரூபாய் கொடுத்துவிட்டு 6000 ரூபாயை பிடுங்குகின்றனர் - தமிழிசை சவுந்தரராஜன்..!
கோவை விமான நிலையத்தில் இன்று (ஜுலை 18) பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். tamilisai attack dmk govt and stalin
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு !
அப்போது, ”முதல்வர் ஸ்டாலின் 10 நிமிடம் ஒரு வீட்டில் பேசுங்கள். 30 சதவிகிதம் வாக்காளர்களை சேருங்கள். பாஜக செய்யும் துரோகங்களை, செய்யப் போகிற துரோகங்களை பேசுங்கள் என்று சொல்கிறார்.
திமுக எவ்வளவு துரோகங்களை செய்து இருக்கிறது. 2026 இல் தேர்தல் வருகிறது என்பதால் 5 மாநகராட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் உடனே பதவி விலக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இவ்வளவு நாள் கொள்ளை அடித்ததை மக்கள் பார்த்துக்கொண்டு தானே இருந்தனர். இப்போது ஓட்டு வேண்டும் என்றவுடன் பதவி விலக சொல்லி இருக்கிறார்.
மணல் கடத்தல் இப்போது ஜல்லி கடத்தலாக மாறி உள்ளது. அண்டை நாடான மாலத்தீவிற்கு கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.
தமிழகத்தில் சிறுநீரக கடத்தல் நடந்து வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு செய்தது நாமக்கல்லில் கண்டறியப்பட்டுள்ளது. திமுக கட்சியை சேர்ந்தவர்கள் நடத்தும் பிரம்மாண்டமான மருத்துவமனையில் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு விதிமுறைகளுக்கு மாறாக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் மக்களை சந்தித்து 10 நிமிடம் பேச வேண்டும் என்று சொல்கிறார். 100 நிமிடம் பேசினாலும் மக்கள் திமுகவை நம்ப மாட்டார்கள்” என்றார்.
ஓட்டுக்கு தான் பயம். நாட்டுக்கு பயமில்லை!
தொடர்ந்து அவர், “மாபெரும் தலைவர் காமராஜரை கொச்சைப்படுத்தி பேசியிருக்கின்றனர். தான் பேசியதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று சிவா சொல்கிறார். பேசியது தப்பு என்று சொல்லவில்லை. அதே மாதிரி முதலமைச்சரும் ஒரு தலைவரை களங்கப்படுத்தி விட்டார் என்று சொல்லவில்லை. இதில் குளிர் காய பல பேர் காத்திருக்கிறார்கள். அதனால் பேச வேண்டாம் என்கிறார். அப்படி என்றால் ஓட்டுக்கு தான் பயம். நாட்டுக்கு பயமில்லை.
காமராஜரின் மதிப்பில் உங்களுக்கு அக்கறை இல்லை. காங்கிரஸ்காரர்கள் ஓட்டுக்காக இன்னும் கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விட கேவலம் எதுவும் கிடையாது. இதற்கு திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ்காரர்களும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
காமராஜரை பற்றி சொல்ல உங்களுக்கு வேறு எதுவுமே இல்லையா? அவருக்கு நான் சமாதி கட்டினேன் என்று சொன்னால், கடற்கரையில் ஏன் அடக்கம் செய்யவில்லை. காமராஜர் எவ்வளவு பள்ளிகள் கட்டினார். அணைகள் கட்டினார். எவ்வளவு கல்வி நிறுவனங்கள் கட்டினார் என்பதை பற்றி சொல்வதில் என்ன பிரச்சனை? திருச்சி பிஹெச்எல் நிறுவனத்திற்கு போய் சிவா பார்க்க வேண்டும். காமராஜர் கொண்டு வந்த அந்த நிறுவனத்தில் இரண்டு லட்சம் பேர் வேலை செய்கின்றனர்” என்றார்.
1000 கொடுத்துவிட்டு 6000 பிடுங்குகின்றனர்!
கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “கூட்டணி பற்றி எல்லாம் டெல்லியில் உள்ள பெரிய தலைவர்கள் பேசுவார்கள். நான் அது குறித்த கேள்விக்கு பதில் சொல்லவே மாட்டேன்.
அதிமுகவுக்கும், பாஜகவிற்கும் இடையே எந்த விரிசலும் இல்லை என்று அண்ணன் எடப்பாடி தெளிவாக சொல்லி விட்டார். திமுக கூட்டணி வைக்கும் போது மதவாத கட்சி இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
திமுக அப்பட்டமான ஓட்டு அரசியலை செய்து வருகிறது. மருத்துவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், இடைக்கால ஆசிரியர்கள் என அனைவரும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். தேர்தல் பரப்புரைக்காக வீட்டுக்கு வரும் திமுகவினரிடம் கொடுத்த வாக்குகளை திமுக நிறைவேற்றியுள்ளதா என மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் கொடுத்துவிட்டு 6000 ரூபாயை பிடுங்குகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் 1500 ரூபாய் கொடுப்பதாக சொல்லி இருக்கிறாரே? என்ற கேள்விக்கு, டாஸ்மாக்கை கட்டுப்படுத்துவார். நாங்கள் உடன் இருக்கிறோம். அவரை கட்டுப்படுத்த வைப்போம். எடப்பாடி பழனிசாமி 1500 ரூபாய் கொடுத்தால் அது டாஸ்மாக் கடைக்கு செல்லாமல் இருக்கும் வகையில் எங்களிடம் திட்டம் இருக்கிறது. ஓட்டு போட்டால் தான் நாங்கள் அந்தத் திட்டத்தை சொல்வோம்” என்று தெரிவித்தார்.
தமிழகத்திலும் NDA கூட்டணி ஆட்சி!
மேலும் மற்ற மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடப்பது போல தமிழகத்திலும் நடக்கும் என்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சி வந்தாலும் அது பிரம்மாண்டமான கட்சிதான் என்றார்.
ஆனால் அதிமுக கூட்டணி என்று எடப்பாடி சொல்லுகிறார், தேசிய ஜனநாயக கூட்டணி என்று என்று சொல்லவில்லையே என்ற கேள்விக்கு வார்த்தைகளில் விளையாட வேண்டாம் என்றார்.
பிரேக்கிங் நான் கொடுக்க மாட்டேன். எதுவுமே நிச்சயம் பிரேக் ஆகாது. பிரேக் ஆகிற மாதிரி நான் எதுவுமே கொடுக்க மாட்டேன். INDIA கூட்டணிக்கு வேண்டுமானால் பிரேக் இருக்கும். எங்கள் கூட்டணிக்கு (NDA) பிரேக்கிங்கே இருக்காது” என தமிழிசை தெரிவித்தார்.