தமிழ் முழக்கம் சாகுல் அமீது கொரோனா பாதிப்பால் காலமானார்.. தலைவர்கள் இரங்கல் !!

தமிழ் தேசியவாதியும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான தமிழ் முழக்கம் சாகுல் அமீது காலமானார்.
சாகுல் அமீது ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் இருந்த அந்தனப்பேட்டை எனும் சிற்றூரில் பிறந்தவர். ஈழத்தின் மீதும் பிரபாகரன் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்டவர்.
தமிழினம் சார்ந்து வெளிவந்த மிகசொற்ப இதழ்களில் ஒன்றான ‘தமிழ் முழக்கம் வெல்லும்' இதழை நடத்தியவர் சாகுல் அமீது. மேலும் மேடைகளில் தமிழில் இவர் ஆற்றும் உரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும்.
25 ஆண்டுகளுக்கும மேலாக தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவையடுத்து திருவாரூர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அத்தொகுதியில் சாகுல் அமீது களம்கண்டார்.
இந்நிலையில், தமிழ் முழக்கம் சாகுல் அமீது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவை பலன் அளிக்காமல் சாகுல் அமீது காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in