சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தைச் சேர்ந்த கீழடி தேர்வு..!
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றுலா அமைச்சகம், 2024-ம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. கலாச்சார மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்து, மேம்படுத்தும் கிராமங்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த வகையில், சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியின் 2-வது பதிப்பில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து, மொத்தம் 991 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 8 பிரிவுகளின் கீழ் சிறந்த சுற்றுலா கிராமங்கள் என 36 கிராமங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கீழடி, பாரம்பரிய பிரிவின் கீழ் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆன்மீகம் மற்றும் ஆரோக்கியம் பிரிவின் கீழ் தமிழகத்தில் உள்ள மேல்காலிங்கம்பட்டி சிறந்த சுற்றுலா கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.