1. Home
  2. தமிழ்நாடு

பொது மக்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அறிவிப்பு..!

Q

அரபிக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு பருவழை மூன்று நாள்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் பத்து நாள்கள் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

 

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட அறிவிப்பில், “கேரளா, கர்நாடகாவுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை பத்து நாள்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் வால்பாறை, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், கன்னியாகுமரி மாவட்டம் ஆகிய இடங்களிலும் மே 23ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை பத்து நாள்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்களில் இந்த பத்து நாள்களில் 20 செ.மீ வரை கூட (24 மணி நேரத்தில்) மழை கொட்டித் தீர்க்கும் என்று பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

தென்மேற்கு பருவமழை காலத்தில் வழக்கமாக இது போன்ற கனமழை ஜூன் மாதத்தில் பெய்யும். ஆனால் அரபிக்கடலிலும், வங்கக் கடலிலும் ஒரே நேரத்தில் இரண்டு சிஸ்டம் உருவாகியுள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

இந்த விடுமுறை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுற்றுலா செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். குறிப்பாக மழை தொடங்கிய பின்பு மிக கவனமாக இருக்க வேண்டும்.

இடுக்கி, குடகு, வயநாடு, கூடலூர் - அவலாஞ்சி , வால்பாறை, சிக்கமகளூர், கர்நாடக கடலோரப் பகுதிகள், உடுப்பி, ஷிமோகா மலைகள், உத்தர் கன்னடா, வடக்கு கடலோர கேரளா பகுதிகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லி மலை, மேகமழை ஆகியவை பயணத்துக்கு பாதுகாப்பான பகுதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு வானிலை தொடர்பாக அவர் , “சென்னைக்கு மழையிலிருந்து சிறு இடைவேளை கிடைக்கும். உள் தமிழகத்தில் சில இடங்களில் வெள்ளிக் கிழமை மழை இருக்கும். பெங்களூருவில் மேற்குப் பக்கத்திலிருந்து மேகங்களுடன் கூடிய பருவமழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தெற்கு கொங்கன் - கோவா கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

அரபிக் கடலில் நிலவி வந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கேரளாவில் மூன்று நாள்களில் தென் மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.

Trending News

Latest News

You May Like