தமிழகத்திற்கு நவ.23-ம் தேதி வரை வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்..!
காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடக அரசு எந்த உத்தரவையும் மதிக்காமல் தமிழகத்துக்கு போதிய தண்ணீரை திறந்துவிட மறுத்து வருகிறது. அணைகளில் தண்ணீர் இல்லை, குடிநீருக்கு பற்றாக்குறையாக உள்ளது என்று கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.
இதற்கிடையே கடந்த 30ஆம் தேதி காணொலி வழியாக காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 89-வது கூட்டம் அதன் தலைவா் வினித் குப்தா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக உறுப்பினரான திருச்சி காவிரி வடிநீா் கோட்டத் தலைமைப் பொறியாளா் எம். சுப்பிரமணியன், தமிழக காவிரி தொழில்நுட்பக் குழு தலைவா் ஆா்.சுப்பிரமணியன் மற்றும் பிற 3 மாநில உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.
இதில், கா்நாடக அணைகளில் உள்ள நீா் இருப்பு வரத்தை கணக்கிட்டு நவம்பா் மாதத்தில் (15 நாள்கள்) தமிழகத்திற்கு வினாடிக்கு 13,000 கனஅடி தண்ணீர் வழங்க அறிவுறுத்த வேண்டும் என தமிழகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கர்நாடக அரசு தரப்பில், நீர்வரத்து இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறப்பட்டது.
இறுதியாக, நவம்பா் 1 முதல் 23- ம் தேதி வரை 23 நாள்களுக்கு வினாடிக்கு 2,600 கன அடி தண்ணீா் பிலிகுண்டுலுவில் கா்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடவேண்டும் என ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடுவது குறித்து காவிரி ஒழுங்கற்றுக்குழு பரிந்துரைப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் நேற்று மதியம் கூடியது. இந்தக் கூட்டத்தில் நேற்று தமிழகத்தின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் கர்நாடகா, புதுச்சேரி, கேரளா அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அப்போது தமிழ்நாட்டுக்கு ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முடிவெடுத்தபடி அக்டோபர் 27 வரை நிலுவையில் உள்ள 11 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்திற்கு நவ.23-ம் தேதி வரை வினாடிக்கு 2,600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நேற்று நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடக அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் அதற்கு தமிழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.