உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சையில் சிறந்த மாநிலமாக தமிழகத்திற்கு விருது..!

தமிழகத்தில், மருத்துவத்துறை நாளுக்கு நாள் புதிய வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மருத்துவ ரீதியாகவும் பல வளர்ச்சிகளை காண முடிகிறது. மேலும் உறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அளிப்பதிலும், உறுப்பு தான விழிப்புணர்விலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இந்திய அளவில் உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்த செயல்பாட்டிற்காக தமிழகத்திற்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. 13வது தேசிய உறுப்பு கொடை தினத்தையொட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் இருந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: "இதன் மூலம் தமிழகம், ஏற்கெனவே கடந்த காலங்களில் பெற்றிருந்த இந்த சிறப்புக்குரிய தகுதியை தொடர்ந்து நிலைநிறுத்தி வைத்திருக்கிறது.
தற்போது தமிழகத்தில் 40 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளிலும், 120 தனியார் மருத்துவமனைகளிலும் இந்த Organ Harvest License உள்ளது. இந்தியாவிலேயே உறுப்பு தானம் அதிகமாக பெறக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இப்படி மிகச் சிறப்பான கட்டமைப்பினை பெற்றிருக்கிற காரணத்தினாலும், தொடர்ந்து இதய மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கணையம் மாற்று அறுவை சிகிச்சை, இதயமாற்று அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை கிச்சை, கருவிழி மாற்று அறுவை கிச்சை, தோல் மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மாற்று அறுவை கிசிச்சை, எலும்பு மஞ்சை மாற்று அறுவை சிகிச்சை என்று பல வகைகளில் உறுப்பு மாற்று அறுவை கிச்சைகள் தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் நானும், நமது துறையின் செயலாளர் அவர்களும் பங்கேற்று தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களுடான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான இணையதள கருத்தரங்கம் நடத்தியிருக்கிறோம். அந்த கருத்தரங்கில் 500 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக உறுப்பு மாற்று, உறுப்பு தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், அதற்கான விழிப்புணர்வு போன்ற பணிகளில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கின்றது. அதனை பாராட்டும் விதமாக Best State விருது தந்திருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.