விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கட்டுப்பாடு விதித்த தமிழக காவல்துறை..!
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்ட கட்டுப்பாடு, வழிமுறைகள் குறித்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப பட்டுள்ளது.
விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி, ரசாயன கலவை இல்லாத சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். விநாயகர் சிலைகள் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற மத ஸ்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகளை வைக்க கூடாது. மதவெறி தூண்டும் வகையில், பிற மதத்தினரின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் முழக்கங்களை எழுப்புவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது.
விநாயகர் சி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்க உள்ளாட்சி அமைப்பின் அனுமதி அவசியம் ஆகும்.
விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்கள், ஊர்வலம் எடுத்து செல்லும் இடங்கள், சிலைகளை கரைக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்து செல்வதற்கு அனுமதி இல்லை. மினி லாரி, டிராக்டர்களில் சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். ஒலிபெருக்கி வைக்க காவல் ஆய்வாளரிடம் அனுமதி பெறுவது அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதன் காரணமாக, வழக்கமாக வழங்கும் பாதுகாப்பை காட்டிலும் மிகுந்த கவனம் மற்றும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பு பணிகளை காவல்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய, பதட்டமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க கூடாது. கடந்த காலங்களில் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் தான் அனுமதி வழங்க வேண்டும். உரிய அனுமதி இல்லாமல் பேனர்கள், கொடிகள் கட்டுவதை தடுக்க வேண்டும் என அறியுறுத்தப்பட்டு உள்ளது.
நீர் நிலைகளில் கரைக்கும் முன், சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருக்கும் துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், பூஜை பொருட்களை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.