1. Home
  2. தமிழ்நாடு

‘இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என வாசலில் கோலமிடுங்கள்: ஸ்டாலின்..!

1

தமிழ்த் தாயைப் போற்றிடுவோம், மகிழ்ச்சிப் பெருவிழாவாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமது பொங்கல் வாழ்த்துக் கடிதத்தில், “நம் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு நாம் என்றும் உண்மையாக இருந்து உழைத்திடுவோம். பொதுமக்கள் பங்கேற்புடன் பண்பாட்டுத் திருவிழாவாக பொங்கல் நன்னாளைக் கொண்டாடுவோம்,” என்று கூறியுள்ளார்.

வேளாண் உழைப்பின் விளைச்சலைப் போற்றும் வகையில் புதுப்பானையில் பொங்கலிட்டு, தங்கள் வாழ்க்கையில் விடியல் தந்த சூரியனுக்கு அதைப் படையலிடும் பழக்கம் கொண்டவர்கள் தமிழர்கள்.

பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், தமிழர் திருநாள், திருவள்ளுவர் தினம், இலக்கியத் திருவிழா, கலைத் திருவிழா, நம்ம ஊர் திருவிழா, ஏறு தழுவுதல் என தமிழர் மாதமாகவே தை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டின்மீது தாக்குதல் தொடுத்த வேறுவிதமான பண்பாடுகளைத் தகர்ப்பதற்கான ஆயுதமாகத் தமிழர் திருநாள் எனும் பொங்கல் திருநாளை நாம் கொண்டாடி வருகிறோம்

இல்லத்தில், உள்ளத்தில், உணர்வினில், கலையில், இலக்கியத்தில், வீர விளையாட்டுகளில், வாழ்வியல் நடைமுறைகளில் தமிழர்களுக்கெனச் சிறந்த பண்பாடு உண்டு என்பதைக் காட்டுகின்ற வகையில் தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் வாழ்கின்ற மக்கள் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம்.

அறுவடைத் திருநாளாம் பொங்கலின் அடையாளம் என்பது, வாழ்க்கையில் விடியல் ஏற்பட வேண்டும் என்பதுதான். அதனால்தான், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம்பிக்கையுடன் தமிழர்கள் பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்களின் அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழர்களின் இல்லத்திலும் உள்ளத்திலும் உண்மையான மகிழ்ச்சி பொங்கிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களின் வாழ்விற்கு விடியல் தரும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் என்று அவர் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like