பல்வேறு சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது..!
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களுக்கு வீடுகள் வழங்கும் கனவு இல்லம் திட்டம்; மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை இல்லங்களுக்கு சென்று களப் பணியாளர்கள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் போன்றவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா காலத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை ஈடுசெய்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள இல்லம் தேடிக் கல்வி திட்டம்; சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளைக் குறைக்கவும், அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளைக் குறைப்பதற்கும் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 என்ற திட்டம்; கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றும், வேலைக்கேற்ற திறன் இல்லாதவர்களாகக் காணப்படும் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்புகளைப் பெற வழிவகுக்கும் நான் முதல்வன் திட்டம் போன்றவை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துகள் குறைபாடுடைய 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் செய்து, மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரைப் பிரித்தறிந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குவதற்கு வழிவகை செய்யும் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்; 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் 8 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவர்களும் கற்றலின் அடிப்படைகளான வாசித்தல், எழுதுதல், எண்ணறிவு ஆகியவற்றைக் கற்று அதை உறுதிப்படுத்தும் எண்ணும் எழுத்தும் திட்டம்;
2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தவேண்டும் என்னும் ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்து, அந்த இலக்கை எய்தும் வகையில் உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வேலைவாய்ப்புகள் மிகுந்த முதலீடுகளை ஈர்ப்பது என்ற இருமுனை அணுகுமுறைகள் கொண்டுள்ள முதலீட்டாளர்களின் முதல் முகவரி திட்டம்;
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவியர், தடையின்றி உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம்; 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசுத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்;
அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த சமூக அமைப்புகள், பெரும்தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் ஆகியோருடன் இணைந்து பள்ளிகள் மேம்பாடு அடைவதை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித் திட்டம்; உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் கட்டிடங்கள், கூடுதல் வகுப்பறைகள், கணினி அறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்; தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் செழுமையையும் சமூகச் சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே கொண்டு செல்வதற்காகத் தொடங்கப்பட்ட மாபெரும் தமிழ்க் கனவுத் திட்டம் போன்றவை இந்த ஆட்சியின் முக்கிய திட்டங்களாக கருதப்படுகின்றன.
2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகளை ரூ.4 ஆயிரம் கோடியில் மேம்படுத்தும் முதல்-அமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்; தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை அரசு மானியமாகவும், 65 சதவீத மூலதன தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீத வட்டி மானியமாகவும் அளித்து ஆதிதிராவிட சமுதாய இளைஞர்களையும் மகளிரையும் தொழில் முதலாளிகளாக உயர்த்தும் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டம்; தமிழக அரசின் திட்டங்களின் பயனாளிகளைத் தொடர்பு கொண்டு, நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளைக் கேட்டறியும் நீங்கள் நலமா? திட்டம்; ஆண்டுக்கு ரூ.200 கோடி வீதம் 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் ஆதி திராவிடர் குடியிருப்புகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்வோம் என்று கூறி, நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து, மக்களின் வாழ்வாதாரம் உயர்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.