தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியம் ரூ.17 உயர்வு..!

தமிழகத்திற்கு 100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியத்தை ரூ.17 ரூபாய் மத்திய அரசு உயர்த்தியது. ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்த, 100 நாள் வேலை அளிக்கும் திட்டத்தை, 2005ல் அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. தமிழகத்தில், 2008 - 09ம் ஆண்டில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு, 5 கி.மீ., சுற்றளவுக்குள், ஓராண்டில் 100 நாட்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் சாலைகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள் உள்ளிட்ட பொது சொத்துக்களை உருவாக்குவதே, இத்திட்டத்தின் பிரதான நோக்கம். நாடு முழுதும், 740 மாவட்டங்களில், 13.42 கோடி பேர் பயனாளிகளாக உள்ளனர். இந்த திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு, 3,796 கோடி ரூபாய் மத்திய அரசு விடுவிக்காமல் நிறுத்தி வைத்து உள்ளது என தமிழக அரசு குற்றம் சாட்டி இருந்தது. அதுமட்டுமின்றி மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் 319 ரூபாயில் இருந்து 336 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2024-25ம் நிதியாண்டில் ஊதியமாக ரூ.319 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது.