பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தமிழக அரசு தற்போது செயல்படுத்தாது - மு.க.ஸ்டாலின்..!
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் 4-1-2024 நாளன்று பிரதமருக்குத் தான் எழுதியிருந்த கடிதத்தினை முதல்வர் நினைவுகூர்ந்துள்ளார்.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை ஆய்வு செய்திட தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டதாகவும், இக்குழு விரிவான ஆய்வினை மேற்கொண்டு, இத்திட்டத்தில் கீழ்க்காணும் மாற்றங்களைச் செய்திடப் பரிந்துரைத்துள்ளதாகவும், அவற்றைப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள்:
1. விண்ணப்பதாரரின் குடும்பம், பாரம்பரியமாகக் குடும்ப அடிப்படையிலான வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத் தேவை நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
2. இத்திட்டத்தில் பயன்பெறுவோரின் குறைந்தபட்ச வயது வரம்பினை 35-ஆக உயர்த்தலாம். இதனால் தங்கள் குடும்ப வர்த்தகத்தைத் தொடர, அதனை நன்கறிந்தவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற முடியும்.
3. கிராமப்புறங்களில் பயனாளிகளைச் சரிபார்க்கும் பொறுப்பு கிராம பஞ்சாயத்துத் தலைவருக்குப் பதிலாக, வருவாய்த் துறையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இந்நிலையில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்திலிருந்து 15-3-2024 அன்று வரப்பெற்ற பதிலில், மேற்படி பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
எனவே, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தற்போதைய வடிவில் செயல்படுத்துவதை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செல்லாது என்றும், இருப்பினும், சமூக நீதி என்ற ஒட்டுமொத்த கொள்கையின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத கைவினைஞர்களை உள்ளடக்கி, விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தவிருக்கும் இந்தத் திட்டம், சாதி மற்றும் குடும்பத் தொழில் வேறுபாடின்றி, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும் முழுமையான ஆதரவை அளிக்கும் என்றும், இத்தகைய திட்டம் அவர்களுக்கு நிதி உதவி, பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் விரிவாக உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.