மதுரையை சுற்றி அம்மன் கோவில்களுக்கு டூர் போகலாம் - தமிழக அரசு ஏற்பாடு..!
பக்தர்கள் அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபட ஏதுவாக தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) பல்வேறு சுற்றுலா திட்டங்களை இந்த ஆடி மாதத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
அந்த வகையில், மதுரை மற்றும் மதுரையை சுற்றியிருக்கும் அம்மன் கோவில்களை ஒரு நாளில் சென்று வழிபட தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறையின் கீழ் இயங்கும தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (TTDC) ஏற்பாடு செய்துள்ளது.
மதுரையில் உள்ள Hotel Tamilnadu-இல் இருந்து காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த சுற்றுலா அன்று இரவு 7.45 மணிக்கு நிறைவடையும். இந்த சுற்றுலா பயணத்தில் நீங்கள் மீனாட்சி அம்மன் கோவில், மதுரை மாரியம்மன் கோவில், வண்டியூர் காளி அம்மன் கோயில், மடப்புரம் வெட்டுடையார் காளியம்மன் கோயில், விட்டனேரி முத்துமாரியம்மன் கோவில், தாயமங்கலம் ராக்காயி அம்மன் கோவில், அழகர் கோயில் ஆகிய வழிபாட்டு தளங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
வயதானவர்கள் ஆதார் கார்ட்/ஓட்டுநர் உரிமம்/வாக்காளர் அட்டை/பாஸ்போர்ட் ஆகிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். சிறுவர்களுக்கு ஆதார் அட்டை/பள்ளி அடையாள அட்டை, குழந்தைகளுக்கு ஆதார் அட்டை/பிறப்பு சான்றிதழ் ஆகியவை தேவைப்படும்.
இந்த ஒருநாள் சுற்றுலா திட்டத்திற்கு ரூ.1400 வசூலிக்கப்படுகிறது. உணவு மற்றும் இன்ன பிற செலவுகள் அனைத்தும் பயணிகளின் பொறுப்புதான்.