1. Home
  2. தமிழ்நாடு

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் ரத்து – தமிழக அரசு உத்தரவு!

1

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் உள்பட 15 பேர் மீது புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் காவல் துறை மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அரசு இதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டது. இதுதொடர்பாக, துணை ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, அரசு முதன்மை செயலாளர் அமுதா தலைமையில் உயர்மட்ட குழுவினரும் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. மேலும், உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, சில காவல் துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் பல்வீர் சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் கூறியது. மேலும், கடந்த மாதம் 15-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பல்வீர் சிங்கின், இடைநீக்கத்தை ரத்துசெய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 10 மாதத்திற்கும் மேல் பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பினை பொறுத்து, பல்வீர் சிங் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like