தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு : பெண்கள் சொந்தமாக நிலம் வாங்க, ஆட்டோ வாங்க கடனுதவி..!

சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் மானியக்கோரிக்கையின்போது தமிழ்நாடு அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் விண்ணப்பித்த அன்றே வழங்கப்படும். இணைய வழியிலும் பயிர்க்கடன் வழங்கப்படும்
நிலமற்ற ஏழை விவசாய குடும்பங்களைச் சேர்ந்த பெண் விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வாங்க 5 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும். 2 ஏக்கர் வரை நிலம் வாங்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடனுதவி வழங்கப்படும்.பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆயிரம் பெண்களுக்கு சுற்றுச் சூழலை பாதிக்காத விகையில் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கொள்முதல் செய்வதற்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்படும்
வணிக வங்கிகளைப்போலவே கூட்டுறவு வங்கிகளில் இணைய வழி சேமிப்பு கணக்கு தொடங்குதல், கடன் அட்டை வழங்குதல், கைப்பேசி வங்கிச் சேவைகள் அனைத்தும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நுகர்வு பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு கொண்டுசென்று நேரடியாக வழங்கும் வகையில் விரைவு வணிக முறை விரைவில் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதேபோல் பிற மாநிலங்களில் இருப்பதுபோல் ரேஷன் பொருட்களும் நேரடியாக பயனாளர்களின் வீடுகளுக்கே கொண்டு வழங்கும் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது.