1. Home
  2. தமிழ்நாடு

வட்டி முழுமையாக தள்ளுபடி - தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்..!

1

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் (EWS), குறைந்த (LIG), நடுத்தர (MIG) மற்றும் உயர் (HIG) வருவாய் பிரிவினருக்கு மலிவு விலையில் வீடுகளையும், மனைகளையும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்து வருகிறது. ஒதுக்கீடு பெற்றவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் தவணை முறையிலோ அல்லது முழுமையாகவோ தொகையை செலுத்த வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் பல பயனாளிகள் தவணை தொகையை உரிய காலத்தில் செலுத்தத் தவறிவிட்டனர். இதனால், செலுத்த வேண்டிய அசல் தொகையுடன், மாதத்தவணை தாமதத்திற்கான அபராத வட்டியும் சேர்ந்து, சுமை பன்மடங்கானது. இந்த அபராத வட்டியின் காரணமாகவே, பலரால் தங்களது நிலுவை தொகையை முழுமையாக செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமென பொதுமக்கள் தரப்பிலும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

மக்களின் கோரிக்கையை ஏற்று, வீட்டுவசதித் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, தமிழக அரசு தற்போது அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:

  • இந்த வட்டித் தள்ளுபடி சலுகையானது, மார்ச் 31, 2015-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
  • தகுதியுள்ள பயனாளிகள், தங்களுக்குரிய நிலுவை தொகையை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தினால், மாதத் தவணையை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்
  • வட்டி முதலாக்கத்தின் (Interest on Capitalization) மீது விதிக்கப்படும் வட்டியும் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயனாளிகளின் நிதிச்சுமையை மேலும் குறைக்கும்.
  • நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீது விதிக்கப்படும் வட்டியில், ஒவ்வொரு ஆண்டுக்கும் ஐந்து மாதங்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

சலுகையைப் பெறுவதற்கான கடைசி நாள்

இந்த வட்டித் தள்ளுபடி சலுகைத் திட்டம் மார்ச் 31, 2026 வரை அமலில் இருக்கும். எனவே, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒதுக்கீட்டாளர்கள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது நிலுவை தொகையை முழுமையாகச் செலுத்தி, வட்டி சுமையிலிருந்து விடுபட்டு, தங்களுக்குரிய சொத்துக்கான விற்பனை பத்திரத்தை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை, வாரியத்தின் வரவு செலவுக் கணக்கை சீர்செய்வதோடு, பல்லாயிரக்கணக்கான மக்களின் நீண்ட நாள் கனவான சொந்த வீட்டுக்கு முழுமையான உரிமையாளர் ஆகும் லட்சியத்தை நிறைவேற்ற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like