இலவச வேட்டி சேலை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட்..!
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் ரேஷன் கடைகளில் இலவச வேட்டி சேலைகள் கொடுக்கப்படும். அத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு, பொங்கல் பரிசுத் தொகையும் கொடுக்கப்படும். இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடிய இலவச வேட்டி சேலைகள் கொடுக்கப்பட இருக்கிறது.
இது குறித்து அமைச்சர் காந்தி விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில், விலையில்லா வேட்டி சேலை திட்டத்தினைப் பொறுத்தமட்டில் உற்பத்திக்கு தேவையான தரமான நூல்கள் மூலமாக பொங்கல் 2025-க்கு 177.64 இலட்சம் எண்ணிக்கையிலான சேலைகள் மற்றும் 177.22 இலட்சம் எண்ணிக்கையிலான வேட்டிகள் 2391 எண்ணிக்கையிலான கைத்தறிகள் மூலம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
12040 எண்ணிக்கையிலான பெடல்தறிகள் மற்றும் 54193 எண்ணிக்கையிலான விசைத்தறிகளின் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் மட்டுமே உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவை பல்வேறு தரப் பரிசோதனைகள் செய்யப்பட்டு கொள்முதல் செய்து தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் நாளன்று வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் மூலம் நெசவாளர்களுக்கான வாழ்வாதாரம் நிலை நிறுத்தப்பட்டு, வாழ்க்கைத்தரம் மேம்பட, தமிழ்நாடு அரசு சீரிய முறையில் பணியாற்றி வருகிறது. விலையில்லா வேட்டி சேலை மற்றும் விலையில்லா சீருடை திட்டங்களை தமிழ்நாடு நெசவாளர்களுக்கு முழுமையாக வழங்கப்படுவதில்லை என்று எதிர்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன்.
வெளிமாநிலங்களில் இருந்து போலியாக தரமற்ற சேலைகளை குறைந்த விலைக்கு வெளிச்சந்தையில் வாங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டும், மூன்றில் ஒரு பங்கு தறிகள் மட்டுமே இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டும் அடிப்படை ஆதாரமற்றதும் உண்மைக்கு புறம்பானது.
கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் 1985-இன்படி கைத்தறித் துறையின் அமலாக்கப் பிரிவு மூலமாக திருச்செங்கோடு, சேலம் மற்றும் ஈரோடு சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 2023-2024 ஆம் ஆண்டில் 47710 விசைத்தறிகள் ஆய்வு செய்யப்பட்டு 76 வழக்குகளும் மற்றும் நடப்பு ஆண்டில் அக்டோபர் 2024 வரை 26 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாதந்தோறும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு போலியாக வெளிமாநிலங்களில் தயாரிக்கப்பட்ட கைத்தறி இரகங்கள் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பொங்கல் பண்டிகையின்போது தரமான இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் என உறுதி செய்துள்ளார். ஜனவரி முதல் வாரம் தொடக்கத்தில் இருந்து தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடிய இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. சர்க்கரை, அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடிய இலவச வேட்டி சேலை கிடைக்கும்.