தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு..! குரூப் 2 தேர்விற்கு இலவச பயிற்சி..!
தமிழ்நாடு உள்ள பல்வேறு துறை காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு நடத்தி நிரப்ப வருகிறது. அதன்படி, ஜூலை 15-ம் தேதி குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 645 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளில் - குரூப் 2 கீழ் 50 காலிப்பணியிடங்கள், குரூப் 2ஏ கீழ் 595 காலிப்பணியிடங்கள் என நிரப்பப்படுகிறது.
காலிப்பணியிடங்கள் குறைவு
குரூப் 2, 2ஏ பதவிகளின் கீழ் சுமார் 2,000 காலிப்பணியிடங்கள் வரை நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 645 காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியானது தேர்வர்களிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. குரூப் 4 தேர்வும் மிக கடினமாக அமைந்த நிலையில், அதன் பின் வெளியான குரூப் 2 தேர்வின் காலிப்பணியிடங்களும் குறைவு என்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
என்னென்ன பதவிகள் என்ன?
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர், தணிக்கை ஆய்வாலர், உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குரூப் 2, 2ஏ மூலம் நிரப்பப்படுகிறது.
இரண்டு கட்ட தேர்வு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என நடத்தப்படும். இரண்டு பதவிகளுக்கும் முதல்நிலைத் தேர்வு ஒன்றாகவும், முதன்மைத் தேர்வு தனித்தனியாக நடத்தப்படும். நேர்காணல் கிடையாது. இரண்டு கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு இலவச பயிற்சி
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் இயங்கி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
திறமையான, அனுபவமுள்ள பயிற்றுநர்கள் கொண்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவை நடத்தப்படுகிறது.
குரூப் 2 தேர்விற்கு இலவச பயிற்சி
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், சென்னையில் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 14.07.2025 அன்று முதல் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திங்கள் - வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சியை பெற விரும்புகிறவர்கள் கீழ்கண்ட முகவரியில் நடத்தப்படும் நேரடி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
அலுவலக முகவரி
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
A-28, முதல் தளம், டான்சி கட்டிடம்,
திரு.வி.க. தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை - 32.
தொலைபேசி எண் : 044-22500134, 9361566648.
ஆகஸ்ட் 13 வரை விண்ணப்பிக்கலாம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு வரும் செப்டம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஆகஸ்ட் 13 வரை விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகள் https://tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்விற்கு வழங்கப்படும் இலவச பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.