தமிழக போக்குவரத்துத் துறையில் அதிரடி மாற்றம் - தொலைதூர வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்க அரசு திட்டம்!
தமிழகத்தில் பண்டிகை கால நெரிசலைக் குறைக்கவும், தொலைதூர பயணங்களை எளிதாக்கவும், தேசிய மயமாக்கப்பட்ட வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
தற்போது சென்னை - மதுரை, சென்னை - கோவை, திருச்சி - நெல்லை போன்ற முக்கிய தொலைதூர வழித்தடங்கள் தேசிய மயமாக்கப்பட்ட (Nationalised Routes) வழித்தடங்களாக உள்ளன. இந்த வழித்தடங்களில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (TNSTC) பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சாதாரண தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட சில 'Open Route' எல்லைகளுக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. புதிய வரைவு அறிக்கை (Draft Report):
போக்குவரத்துத் துறை செயலாளர் வெளியிட்டுள்ள புதிய வரைவு அறிக்கையின்படி, இனி அரசு போக்குவரத்து கழகங்கள் தனியார் பேருந்துகளுடன் ஒப்பந்தம் செய்து, அவற்றை அரசு சார்பில் தொலைதூர வழித்தடங்களில் இயக்க முடியும்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், திருச்செந்தூர் சூரசம்ஹாரம் போன்ற பெரிய திருவிழாக் காலங்களிலும் கூடுதல் பேருந்துகளின் தேவையைப் பூர்த்தி செய்ய தனியார் பேருந்துகள் பயன்படுத்தப்படும்.
தற்போதுள்ள நடைமுறைப்படி ஒரே கோட்டத்திற்குள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த புதிய அரசாணை நிறைவேறினால், நெல்லையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடியாக தனியார் பேருந்துகளை அரசு சார்பில் இயக்க வழிவகை ஏற்படும். தனியார் பேருந்துகள் உரிமையாளர்களிடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டு, அவை அரசு போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும். இந்த வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
அறிக்கை வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், அரசு பேருந்துகள் பற்றாக்குறையாக இருக்கும் நேரங்களில் தனியார் பேருந்துகள் மூலமாக தடையற்ற சேவையை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.