இன்று முதல் தக்காளி கிலோ ரூ.60க்கு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை..!

தமிழகத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் அதிகாரியுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், தக்காளி விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் இது போன்ற கூட்டம் நடத்தப்பட்டு தக்காளி விலைகள் குறைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். கூட்டுறவுத் துறைக்கு சொந்தமான பண்ணை பசுமை அங்காடிகளில் வழக்கமான அளவை விட நாலு மடங்கு கூடுதலாக சுமார் 2500 கிலோ தக்காளி வரை விற்பனை செய்யப்படுவதாகவும், 60 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் பெரியக்கருப்பன் விளக்கமளித்தார்.
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இதுபோன்ற பாதிப்பு இருப்பதாகவும், தக்காளி பயிரிடக் கூடிய விவசாயிகளிடம் தக்காளிக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பருவமழை பாதிப்பு காரணமாக கடந்த காலங்களில் தக்காளி பயிரிடப்பட்டதால் சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையில் இல்லாததால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
வடசென்னையில் 32 கடைகள், மத்திய சென்னையில் 25 கடைகள், தென் எண்ணெயில் 23 கடைகள், 27 பண்ணை பசுமை அங்காடிகள் நடமாடும் கடைகள் இரண்டு என 111 கடைகளில் இன்று முதல் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சதவீத கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
தக்காளி பதுக்கி விற்பனை செய்வது எந்த இடங்களிலும் நடைபெறவில்லை எனவும், விவசாயிகள் வணிகர்கள் என அனைத்து தரப்புமே ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார். வரும் காலங்களில் அதிக விளைச்சல் மற்றும் போதிய விலை இன்றி விவசாயிகள் பாதிப்படைவதை தடுக்க வேளாண் மையங்கள் மூலம் விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து, அந்த விலைக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெரியக்கருப்பன் தெரிவித்தார்.