தமிழகம் முழுவதும் இதற்கு தடை - தமிழக அரசு அரசாணை!

உயிரைப் பறிக்கும் மாஞ்சா நூலுக்கு தடை விதித்து அரசாணை..!
`மாஞ்சா நூல் தயாரிக்க, சாதாரண கண்ணாடித் துண்டுகள், பல்லியின் வால், ஒருசில விஷம் நிறைந்த வேதிப்பொருள்கள் கலந்து, அதை மிகவும் பலம் பொருந்தியதாகச் செய்கிறார்கள். காற்றாடி விடும்போது, அது எதிலும் மோதி அறுபடாமல் இருக்கத்தான் இப்படிச் செய்கிறார்கள். வடசென்னையில் காற்றாடித் திருவிழா நடைபெறும். அப்போது காற்றாடி வைத்து, டீல் விடுவார்கள். ஒருசிலநேரம் மாஞ்சாவை பலமாகச் சேர்த்தாலும், அது அறுபடத்தான் செய்யும். அப்போது காற்றாடி மட்டும்தான் அறுபடுமே தவிர அந்த நூலுக்கு ஏதும் ஆகாது. இப்படி ஆபத்தான மாஞ்சா நூலால், இதுவரை பல விபத்துகள் நடந்துள்ளன; உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. , மாஞ்சா நூல் பயன்பாட்டுக்கு காவல்துறை தடை விதித்தது. எனினும், இதைப் பொருட்படுத்தாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாஞ்சா நூலைப் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவோர் இருக்கத்தான் செய்கின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாஞ்சா நூல் தயாரிக்கவும், அதை பயன்படுத்தவும் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கண்ணாடித் துண்டுகள் மற்றும் விஷம் நிறைந்த வேதிப்பொருட்கள் கலந்து அவை செய்யப்படுவதால், அதற்கு தடை விதிக்க ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அரசாணையில், காத்தாடி பறக்கும் போது அதற்காக பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் காயங்களை ஏற்படுத்துவது உண்மை தான். இந்த காயங்கள் மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் மரணத்தை ஏற்படுத்தும் அபாயகரமானதாக மாறிவிடும். எனவே, மாஞ்சா நூல் எனப்படும் பிளாஸ்டிக் அல்லது செயற்கை நூலால் செய்யப்பட்ட காத்தாடி நூலின் அபாயகரமான விளைவுகளிலிருந்து மக்களையும் பறவைகளையும் பாதுகாப்பது விரும்பத்தக்கது.
பிளாஸ்டிக் பொருட்களின் மிக நீண்ட ஆயுட்காலம் மற்றும் இயற்கையில் மக்கும் தன்மை இல்லாததால், இவை தொடர்ந்து கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு, வடிகால் பாதைகள், ஆறுகள், ஓடைகள் போன்ற இயற்கை நீர்வழிகள் மற்றும் பசுக்கள் மற்றும் பிற விலங்குகளின் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகளை தொடர்ந்து ஏற்படுத்துகின்றன.
நைலான் அல்லது செயற்கைப் பொருட்களால் செய்யப்பட்ட மாஞ்சா அல்லது காத்தாடி பறக்கும் நூலுக்கு முழுத் தடை விதிக்கப்படும். நைலான், பிளாஸ்டிக் அல்லது பிரபலமாக அறியப்படும் ‘மாஞ்சா நூல்’ மற்றும் பிற செயற்கை பட்டம், பறக்கும் செயற்கைப் பொருட்களால் செய்யப்பட்ட காத்தாடி பறக்கும் நூலின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு, கொள்முதல், வழங்கல், இறக்குமதி மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.