குழந்தை திருமணம் குறித்து தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கை..! 2 ஆண்டு கடும் சிறை..!

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், குழந்தை திருமண தடைச் சட்டம், 2006 ன் படி பெண்ணுக்கு 18 வயதுக்கு கீழும், ஆணுக்கு 21 வயதுக்கு கீழும் நடைபெறும் எந்த திருமணமும் சட்டத்தை மீறிய குற்றச் செயலாகும். குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இக்குழந்தைகளுக்கு அறிவு முதிர்ச்சி குன்றி, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மன வலிமை இழந்து எப்போதும் ஆண்களை சார்ந்து வாழும் சார்பு நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
குழந்தை திருமண தடைச்சட்டம் 2006-ன் பிரிவு 9,10,11-ன் படி குழந்தை திருமணத்தை நடத்திய பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், மணமகன், திருமணத்தை நடத்தி வைக்கும் மத தலைவர்கள் திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள், நண்பர்கள், இத்திருமணம் நடைபெற உதவி செய்த நபர்கள், அமைப்புகள், திருமணத் தரகர் ஆகிய அனைவரும் குற்றம் செய்தவராகக் கருதப்பட்டு அவர்களக்கு 2 வருடங்கள் கடும் சிறைத்தண்டனை அல்லது ரூ.1 இலட்சம் வரை அபராதம் அல்லது 2 சேர்த்து விதிக்கப்பட வகை செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தை ஆதரிப்பதும் நடத்தி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தை திருமணம் குறித்த புகார் செய்ய 1098, 1091 மற்றும் 181 முதலிய இலவச உதவி எண்களை அழைக்கலாம். குழந்தை திருமணம் குறித்து புகார் தெரிவிப்பவரின் ரகசியம் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட குழத்தைகள் எந்தவிதமான பணியிலும், 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியிலமர்த்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை 2025-க்குள் மாற்ற வேண்டுமென்ற இலக்கின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைத் தொழிலாளர் தடுப்பு படை ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்கள். கட்டுமானப் பணியிடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் காண வாய்ப்புள்ள அனைத்துத் தொழிற்கூடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், மாவட்ட தடுப்புப் படை பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள். அரசுத் துறை அலுவலர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 2024 மற்றும் 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1985-ன்கீழ் மாவட்ட தடுப்புப் படையுடன் கூட்டாய்வுகள் மற்றும் இதர புகார்களின் அடிப்படையில் கடைகள் நிறுவணங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள். தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 03 குழந்தைத் தொழிலாளர்கள், 07 வளரிளம் பருவத் தொழிலாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை பணிக்கு அமர்த்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய வேலையளிப்பவர்கள் மீது காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்தவிதமான பணியிலும், 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியிலமர்த்தக் கூடாது. குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் ரூ.50,000/- வரை அபராதமோ 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமே சேர்த்தோ விதிக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்களை எவரேனும் பணியமர்த்தியிருந்தால் அது குறித்த விவரத்தினை குழந்தைப் பாதுகாப்பு உதவி எண் 1098 என்ற எண்ணிற்கு அழைக்குமாறும் அல்லது மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்திற்கு 0461-2340443 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பள்ளி விடுமுறை நாட்களிலும் குழந்தைத் தொழிலாளரை பணிக்கு அமர்த்தக் கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.