தமிழக அரசு செக்..! அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது.. மீறினால்...

அரசு ஊழியர்களுக்கான புதிய விதிகள் குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழக அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் 1973ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த விதிகளை அனைத்து அரசு ஊழியர்களும் நிச்சயம் பின்பற்ற வேண்டும்.இதற்கிடையே இந்த நடத்தை விதிகளில் மாற்றம் செய்துள்ள தமிழக அரசு, புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, "அரசின் அனுமதி இல்லாமல் அரசு ஊழியர்கள், அவர்களின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், ரூ.25,000க்கும் அதிகமான பரிசுகளை வாங்கக்கூடாது. திருமணம் உட்பட மதச் சடங்குகளின்போது மட்டும் ரூ.25,000க்கு அதிகமான பரிசுகளைப் பெறலாம். இருப்பினும் அதையும் ஒரு மாதத்திற்குள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் எந்தவொரு அரசு ஊழியரும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடவோ அல்லது அதற்கான தூண்டுதலில் ஈடுபடவோ கூடாது. அனுமதியின்றி வேலைக்குச் செல்லாமல் இருப்பதும் கடமைகளைப் புறக்கணிப்பதும், போராட்டமாகவே கருதப்படும்.
அனுமதியின்றி அரசு அலுவலக வளாகத்திலோ, அதையொட்டியோ ஊர்வலம், கூட்டம் நடத்தக் கூடாது. அதில் உரையாற்றவும் கூடாது.. அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிரான கருத்துக்களை எந்த வகையிலும் தெரிவிக்கக் கூடாது. அதேநேரம் அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சங்க பொறுப்பாளர்கள், தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
ஒரு அரசு ஊழியர் தனது அரசுப் பணிகளைத் தவிர அலுவல் சாரா கூட்டம் அல்லது மாநாட்டில் பங்கேற்கவோ தலைமை தாங்கவோ கூடாது. அதில் உரையாற்றவும் கூடாது. அரசு ஊழியர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடாது. வேறு எந்தவொரு விதத்திலும் தொடர்பு வைத்திருக்கக்கூடாது. தேர்தலில் குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கிறார் என்ற சந்தேகத்திற்கு இடமளிக்கக் கூடாது.
அரசு ஊழியரின் குடும்பத்தினர் யாராவது அரசியல் கட்சி, அமைப்புகளில் இருந்தால் அதை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். தேர்தல் சமயத்தில் வாக்களிக்கலாம். ஆனால், யாருக்காகவும் பிரச்சாரம் செய்யக்கூடாது. அரசுக்கு அவமானம் ஏற்படுத்தும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது.
நமது நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவு, கண்ணியம் ஆகியவற்றைப் பாதிக்கும் எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடக்கூடாது. மேலும், இதுபோன்ற சங்கத்திலும் உறுப்பினராக இருக்கக்கூடாது. அலுவலகம் அல்லது பொது இடங்களுக்கு வரும்போதும் மது அருந்தி விட்டு வரக்கூடாது. அதிகாரத்தை வேறு எந்த இடத்திலும் தவறாக பயன்படுத்தக்கூடாது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.