இனி ரூ.30-க்கு ஒரு கிலோ வெங்காயம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் காய்கறிகளின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கதுதுடன் காணப்படுவது வழக்கம். ஆனால் சில நேரங்களில் அவற்றின் விலை உச்சத்தை தொடும் போது பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவது வேதனையளிக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வட மாநிலங்களில் கொட்டித்தீர்த்த கனமழையின் எதிரொலியாக தக்காளி விலை சரசரவென உயர்ந்து, ரூ. 250-க்கு விற்கப்பட்டது.
தக்காளியின் விலை தற்போது குறைந்து காணப்படும் நிலையில், வெங்காய விலை நாடு முழுவதும் நாளுக்குநாள் உச்சத்தை தொட்டு வருகிறது. வெங்காயம் வெட்டாமலேயே வெங்காய விலையை கேட்டால் கண்ணீர் வரும் அளவிற்கு, நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும், வெங்காயத்தின் சராசரி விலை ரூ.80 முதல் ரூ.100 வரை உயர்ந்துள்ளது.
உடனடியாக தமிழ்நாடு அரசு வெங்காயம் விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்து வருகிறது. பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயத்தினை விற்பனை செய்திட தமிழ்நாடு அரசு வெங்காயத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின் படி ஏழை, மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படையாமல் இருக்க எளிய கூட்டுறவுத்துறையின் மூலமாக முதற்கட்டமாக சென்னையில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 4 நடமாடும் விற்பனை வாகனங்கள் என 14 மையங்கள் மூலம் நேற்று முதல் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
தற்பொழுது உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூட்டுறவுத்துறையின் மூலமாக பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலம் கிலோ ஒன்றிற்கு ரூ.30 வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மேலும், தேவைக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள பிற பகுதிகளிலும் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குறுகிய காலத்திற்குள் வெங்காயம் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது” என குறிப்பிட்டுள்ளது.