தமிழகத்தில் 4 முதல் 8-ம் வகுப்பு வரை தேர்வு அட்டவணை மாற்றம்..!
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வு ஏப்ரல் 18 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும் என்று வருடாந்திர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப். 19-ம் தேதிநடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
புதிய தேர்வுக் கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருந்தது. அதன்படி 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 2023-24 கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 4 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 10 மற்றும் ஏப்ரல் 12-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 6-ம் தேதிகளுக்கு மாற்றப்பவடுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.