செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, செல்லகுமார், சசிகாந்த் செந்தில்- காங்கிரஸின் புதிய தலைவர் யார்..?

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் எதிர்கொள்ளப்பட்ட மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட அளவு வெற்றிப் பெற்றது.
கடந்த சில நாட்களாகவே தலைவர் பதவியில் இருந்து கே.எஸ். அழகிரி மாற்றப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக செய்தியாளர்கள் பல சந்தர்ப்பங்களில் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது நான் பல ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருக்கிறேன், புதிய தலைவரை நியமித்தால் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமிக்க தீவிர பரிசீலனைகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வரும் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக இந்த மாற்றம் நடக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதன்படி சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, கரூர் எம்.பி ஜோதிமணி, கிருஷ்ணகிரி எம்.பி செல்லகுமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
அவர்களில் செல்வப்பெருந்தகை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் தலைவரானால், சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்படக்கூடாது என்று தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களை ஒங்கிணைக்கத் தெரியாத அவரால் எப்படி மாநில நிர்வாகிகளை ஒருங்கிணைக்க முடியும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.