பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது. இதனையொட்டி இஸ்லாமியர்கள் தங்களுடைய ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக, ஆண்டுதோறும் ரமலான் நோன்பைக் கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024 ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
2024 ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி,7,040 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.