இந்தி திணிப்பு மாணவர்களுக்கு சுமை -முதல்வர் ஸ்டாலின்..!

தமிழகத்தில் வலிந்து மூன்றாவதாக ஒரு மொழியை படிக்க வேண்டியதில்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முரசொலியில் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்," பாஜக நிர்வாகியான அன்பு சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் எனக்கு மும்மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.
தமிழ். ஆங்கில வாழ்த்துக்கு பிறகு தெலுங்கு மொழியில் வாழ்த்தியிருக்கிறார். அதில் இந்தி இடம் பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு. தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கு மொழியை பள்ளி பருவத்திலேயே படித்து தெரிந்து கொள்ளவில்லை.
தெலுங்கானாவில் பணியாற்றிய போது கற்றுக் கொண்டார். இதிலிருந்து மூன்றாவது ஒரு மொழியை வழிந்து படிக்க வேண்டியதில்லை என்பதையும் தேவைப்படுபவர்கள் புரிந்துகொண்டு பயன்படுத்த முடியும் என்பதை பிறந்தநாள் வாழ்த்து பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் சகோதரி தமிழிசை. அவருக்கு என் நன்றி. தமிழகத்தில் சிபிஎஸ்சி பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்விக் கொள்கையை காரணம். திமுகவினர் காரணம் அல்ல.
தென்னிந்திய மாநிலங்களில் இந்தி கற்றுக்கொள்ள 6000 மையங்களுடன் இந்தி பிரச்சார சபா உள்ளது. அதேபோல வட இந்தியாவில் தென்னக மொழி ஒன்றை கற்றுத்தர சபா உள்ளதா? தமிழ் பிரசார சபாவையும், திராவிட பிரச்சார சபாவையும் வட இந்தியாவில் நிறுவ முடிந்ததா? திமுகவினரின் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளை நடத்துபவர்களும். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை நடத்துபவர்களும் உரிய அனுமதியுடன் தான் நடத்துகிறார்கள்.
அதில் இந்தி கற்றுத்தர மத்திய அரசின் கல்விக் கொள்கைதான் காரணம். தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகள் எதிலும் இந்தி மொழி கட்டாயம் இல்லை. அந்த மொழியில் தேர்வு நடத்துவதும் இல்லை. ஒருவர் விரும்புகிற எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல. எந்த மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்பதைத்தான் அன்று முதல் இன்று வரை தெளிவாக சொல்கிறோம். ஆறறிவு கொண்ட அனைவருக்கும் இது புரிகிறது. ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களுக்கு மட்டும் ஏன் புரியவில்லை? புரியாமல் இல்லை புரியாதது போல் பாசாங்கு செய்கிறார்கள்.
அவர்களை நோக்கம் ஏதேனும் மூன்று மொழி என்பதல்ல. சிறுபான்மை சமுதாய மக்களுக்கான உருது மொழியும், அண்டை மாநிலங்களில் பேசப்படும் தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் நம்முடைய கல்விக் கொள்கையின்படி இங்குள்ள சிறுபான்மை மொழிப் பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன. இந்த மொழிகள் எதுவும் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியது அல்ல.
ஆனால் பாஜகவின் நோக்கமே தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக திணிக்க வேண்டும் என்பதுதான். அதனால்தான் இந்தி படிக்க தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு ஏன் வாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை என்று கரிசனம் வழிவது போல கேட்கிறார்கள். பாஜக ஆட்சி செய்கிற இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் விட தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லாத இரு மொழிக் கொள்கை வழியிலான அரசு பள்ளிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரம் உயர்ந்தே இருப்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களை தெரிவிக்கின்றன.
மாணவர்களின் மீது மொழி திணிப்பு எனும் சுமையை ஏற்றாமல் திறன் மேம்பாடு என்கிற வாய்ப்பை வழங்குவதுதான் திராவிட மாடன் அரசின் கல்வித் திட்டம். வள்ளுவர் சிலையை கங்கை கரையில் நிறுவுவதாக சொல்லி குப்பை மேட்டில் போட்டவர்களா தமிழ் கற்றுத் தருவதற்கான அமைப்பை நிறுவப் போகிறார்கள்? கோட்சே வழியை பின்பற்றும் இயக்கத்தினர் காந்தியின் நோக்கத்தை ஒருபோதும் நிறைவேற்ற மாட்டார்கள்.
சென்னை மாகாணம் என்ற பெயரில் இந்த காலத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் என பெயர் வைக்க செய்தவர் காந்தியடிகள். தமிழ்நாட்டில் தற்போது ரயில்களுக்கு கூட இந்தி சமஸ்கிருத பெயர்களை வைப்பவர்கள் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள். தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பது தான் அவர்களின் ரகசிய திட்டம். அதை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டதுதான் திராவிட இயக்கம்" எனக் கூறியுள்ளார்.