சென்னையில் மின்சார பஸ் சேவை: துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

சென்னையில் காற்று மாசுபாட்டை கணிசமாக குறைக்கும் வகையிலும், பயணிகளுக்கு கூடுதல் வசதி வழங்கும் வகையிலும் தாழ்தள மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி உலக வங்கி உதவியுடன் மொத்த விலை ஒப்பந்தத்தின்படி (ஜி.சி.சி.) ஆயிரத்து 225 மின்சார தாழ்தள பஸ்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.
அதில் முதல்கட்டமாக 625 மின்சார பஸ்களுக்கான ஒப்பந்தமானது அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான 'ஓம் குளோபல் மொபிலிட்டி' நிறுவனத்துடன் போடப்பட்டு உள்ளது. இதில் 400 பஸ்கள் ஏ.சி. அல்லாத பஸ்களும், 225 ஏ.சி. பஸ்களும் அடங்கும். இந்த மின்சார பஸ்களை இயக்குவது மற்றும் பாராமரிப்பது 'ஓம் குளோபல் மொபிலிட்டி' நிறுவனம்தான்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கண்டக்டர்கள் பணியமர்த்தப்பட்டு டிக்கெட் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருவாய் ஈட்டப்படும். இந்த 625 தாழ்தள மின்சார பஸ்களில் முதல் கட்டமாக 120 மின்சார பஸ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை வியாசர்பாடி பணிமனையில் நடைபெற உள்ள விழாவில் தொடங்கி வைத்தார்.