1. Home
  2. தமிழ்நாடு

நாமக்கல் மாவட்ட வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த சூப்பர் திட்டங்கள்!

1

நாமக்கல் மாவட்டம், பொம்மைகுட்டைமேட்டில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்வில் பேசிய முதல்வர் நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு செய்த திட்டங்களை பட்டியலிட்டார்.

முதல்வர் தனது உரையில், “திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொடுத்து வருகிறோம். அதில் நாமக்கல் மாவட்டமும் சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறது. அதில் முக்கியமான சிலவற்றை மட்டும் நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

  • நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
  • நாமக்கல் மாவட்டத்தில் ‘புதுமைப் பெண்’ திட்டம் மூலமாக கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை பெறுவதில் மாநிலத்திலேயே முதலிடம் இந்த நாமக்கல் மாவட்டம்.
  • தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலமாக கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை பெறுவதில் இரண்டாவது இடம் இந்த நாமக்கல் மாவட்டம்.
  • இராசிபுரத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம்
  • பள்ளிப்பாளையம், ஆலப்பாளையம், படவீடு கூட்டுக் குடிநீர் திட்டம்
  • மோகனூர் புதிய குடிநீர் திட்டம்
  • இராசிபுரத்தில் புதிய மாவட்ட அரசு மருத்துவமனை
  • திருச்செங்கோட்டில் புதிய மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை
  • சித்த மருத்துவமனைக் கட்டடம்
  • நாமக்கல் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம்
  • சேந்தமங்கலத்தில் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம்
  • இராசிபுரம் திருவள்ளுவர் கல்லூரியில் புதிய கட்டடம்
  • குமாரபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகம்
  • நாமக்கல்லில் அறிவுசார் மையம், தினசரி சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்
  • புதிய பேருந்து நிலையம்

திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கலைக் கல்லூரி - இப்படி ஏராளமான திட்டங்களை நாமக்கல் மாவட்டத்திற்கு நிறைவேற்றிக் கொடுத்துவிட்டுத்தான் உங்கள் முன்னால் கம்பீரமாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நின்று கொண்டிருக்கிறேன்.

அதுமட்டுமல்ல, இன்று பல்வேறு துறைகள் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. 16 ஆயிரத்து 31 பேருக்கு, 146 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. இலவச வீட்டுமனைப் பட்டா, பயிர்க் கடன்கள், கால்நடை பராமரிப்புக் கடன், கலைஞர் கனவு இல்லம், தையல் இயந்திரம், வேளாண்மை உதவிகள், புதிய குடும்ப அட்டைகள், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, வாரிசு நியமன ஆணைகள், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டப் பயனாளிகளின் ஆணைகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆணைகள், கைத்தறி ஆதரவு திட்ட ஆணைகள், நெசவாளர் சேமிப்பு பாதுகாப்புத் திட்ட ஆணைகள், தானியங்கி பால் பரிசோதனை கருவி வழங்கும் ஆணைகள் – இப்படி பல்வேறு உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.

அதாவது, ஒவ்வொரு துறையின் சார்பிலும் எப்படி எல்லாம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டுமோ, அப்படி எல்லா வழிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதனால், 16 ஆயிரத்து 31 தனிநபர்கள் இல்லை. அவர்கள் மட்டும் இல்லை. 16 ஆயிரத்து 31 குடும்பங்கள் – அதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்; அவர்களைச் சுற்றி இருக்கின்றவர்கள் பயனடைய இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, இந்த விழா மூலமாக பல்வேறு திட்டங்களை திறந்து வைத்திருக்கிறேன். அதில் மிக மிக முக்கியமானது மாவட்ட தலைநகரில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம். அதோடு, முடிவுற்ற 134 திட்டப்பணிகளை திறந்து வைத்திருக்கிறேன். இதன் மொத்த மதிப்பு 298 கோடியே 2 இலட்சம் ரூபாய். புதிதாக மொத்தம் 140 பணிகளுக்கு இன்று இங்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். நகர்ப்புர வளர்ச்சித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலை துறை, வணிகவரித்துறை, பேரூராட்சித் துறை, பதிவுத்துறை, பள்ளிக்கல்வித் துறை மற்றும் பால்வளத்துறை என்று பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 365 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன்.

இவை உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, அனைத்தும் திறப்பு விழா காணும்! ஏன் அவ்வளவு உறுதியாக சொல்கின்றேன் என்றால், கடந்த சில நாட்களாக, நாம் பொறுப்பேற்ற இந்த மூன்றாண்டு ஆட்சி காலத்தில், நம்மால் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எது எது நிறைவேற்றப்பட்டப் பணிகள், நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பணிகள் அதையெல்லாம் துறைவாரியாக ஆய்வு கூட்டங்களை நான் நடத்திக்கொண்டு வருகிறேன். அதை இந்த மாதத்தில் முடித்துவிட்டு, அடுத்த நவம்பர் மாதம் தொடங்கி, அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் பணிகளை நேரடியாக நானே சென்று கள ஆய்வு செய்யப் போகிறேன். அதனால் தான் சொல்கிறேன். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும்.

இந்த நாமக்கல் மாவட்டத்திற்கு வர வேண்டும் என்று என்னை அழைக்க பலமுறை வந்த தம்பி ராஜேஸ்குமார் அவர்கள் வந்தார்கள். நான் ஏற்கனவே சொன்னது போல், எப்போதும் கோரிக்கையுடன்தான் வருவார்; அது இன்னும் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. நாமக்கல்லுக்கு வந்துவிட்டு உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை அறிவிக்காமல் என்னால் இருக்க முடியுமா? அறிவிக்காமல் நான் போனால் விட்டுவிடுவீர்களா நீங்கள்? ராஜேஸ்குமாரும் விடமாட்டார், நீங்களும் விடமாட்டீர்கள். அதனால், இப்போது அறிவிப்புகளை நான் உங்களிடத்தில் எடுத்துக் கூற விரும்புகிறேன்.

அறிவிப்பு ஒன்று, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கும் நாமக்கல்லுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்!


அறிவிப்பு இரண்டு, சேந்தமங்கலம் கொல்லிமலை பகுதியில் விளையக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தி விற்பனை செய்ய ஏதுவாக, குளிர்பதனக் கிடங்கு வசதியுடன் கூடிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும்.

அறிவிப்பு மூன்று, மோகனூரில் இருக்கும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்று பெயரிடப்பட்டு, இன்னும் சிறப்பாக செயல்பட, இந்த ஆலையின் எத்தனால் உற்பத்தி அலகு 4 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

அறிவிப்பு நான்கு, பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வரக்கூடிய, நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு நெடுஞ்சாலைத் துறை மூலம் 30 கோடி ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கப்படும் - இப்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும். ஏன் என்றால், எங்களைப் பொறுத்தவரைக்கும், சொன்னதைச் செய்வோம்! செய்வதைத்தான் சொல்வோம்! ” என்று குறிப்பிட்டார்.

Trending News

Latest News

You May Like