தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை, அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகத் தெரிவித்த முதலமைச்சர் “இது போன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதோடு, மீனவர்கள் குடும்பங்களுக்குப் பெருத்த துயரத்தை ஏற்படுத்துகிறது” எனக் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024ம் ஆண்டில் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் சுட்டிக் காட்டினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இது போன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும், உடனடியாகத் தூதரக நடவடிக்கைகள்மூலம் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.