ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
வரும் ஜூன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கள ஆய்வில் ஈடுபடவுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதற்காக ஜூன் 11ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து கார் மூலமாக முதலில் ஈரோடு செல்கிறார். பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியில் நடைபெறவுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஜூன் 12ஆம் தேதி சேலம் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார். இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜூன் 12ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.
மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளது டெல்டா பாசன விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து அணைகள் நிரம்பும். தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும். அதேபோல குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.
ஆனால் கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை என்பதால் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட முடியவில்லை. ஜூன் இறுதியில்தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த வருடம் தொடர்ச்சியாக மேட்டூர் அணை நீர்மட்டம் சீராக இருந்து வருகிறது. அத்துடன் கோடை மழை பொழிவு மற்றும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது என சாதகமான அம்சங்களும் உள்ளன
.png)