தமிழகத்தைப் பகிரங்கமாக மிரட்டுகிறது ஒன்றிய அரசு: - முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!

சமக்ரா சிக்ஷா அபியான் (SSA) என்ற பெயரில் மத்திய அரசு நாடு முழுவதும் கல்வித்தரத்தை உயர்த்துவது, கல்விக்கு தேவையான வசதிகள் வழங்குவதற்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்வியில் சம வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உயர்ந்த கல்வி வழங்குவதும் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். குறிப்பிட்டு சொல்வது என்றால் இந்தியா முழுவதும் பள்ளிகளுக்கான உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் ஆகும்.
சமக்ர சிக் ஷா அபியான்' திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மத்திய-மாநில அரசுகள் 60:40 சதவீதம் அடிப்படையில் நிதியை ஒதுக்கி பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கு கல்வி உதவி, கல்வியில் சமத்துவம் மற்றும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட கல்வி சார்ந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். இதில் மத்திய அரசு 60 சதவீதம் நிதியினை ஒவ்வொரு ஆண்டும் வழங்கும்.
2024-25-ம் கல்வியாண்டுக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியாக ரூ.3 ஆயிரத்து 586 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் மத்திய அரசு தன் பங்காக ரூ.2 ஆயிரத்து 152 கோடியும், மாநில அரசு ரூ.1,434 கோடியையும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருந்து. மத்திய அரசு தன்னுடைய பங்கு நிதியை 4 தவணைகளாக பிரித்து வழங்குவது நடைமுறையாகும். ஆனால் இந்த முறை வழங்கவில்லை..
இந்த ஆண்டுக்கான முதல் தவணைத் தொகை வழங்குவதற்கு முன்னதாக 'பி.எம்.ஸ்ரீ' பள்ளித்திட்டத்தில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இணைய மத்திய அரசு, மாநில அரசிடம் வலியுறுத்தியாக கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக்கொள்கையை ஏற்க ஆரம்பத்தில் இருந்து தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையின் படி உள்ள பி.எம்.ஸ்ரீ பள்ளித்திட்டத்தை ஏற்றால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டியது வரும். அதனால் பி.எம்.ஸ்ரீ பள்ளித்திட்ட ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்து போடவில்லை.
இதனிடையே, 2024-25-ம் கல்வியாண்டில் தமிழக அரசுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியாக ஒதுக்கிய ரூ.2,152 கோடியை, கல்வியாண்டு நிறைவடைய உள்ளதால், அந்த நிதியை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியது.
ஒன்றிய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டுக்கு கல்விநிதி வழங்க ஒன்றிய அரசு மறுத்துவிட்டது. கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது தளத்தில், "தமிழ்நாடு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,512 கோடியை பறித்து, நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக தமிழ்நாடு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பறிக்கப்பட்டுள்ளது. நிதியை பறித்து தமிழ்நாடு மாணவர்களை ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.