விஜயா தாயன்பனின் மகள் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!!
தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் உறுப்பினரும் திமுக மகளிர் அணி தலைவருமான விஜயா தாயன்பன்-தாயன்பன் தம்பதியரின் மகள் தேவிகா ஸ்ரீதரன் அமெரிக்காவில் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். . அவரது இறுதிச்சடங்கு சென்னை தேனாம்பேட்டை போயஸ் ரோடு முதல் வீதியில் உள்ள விஜயா தாயன்பன் இல்லத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிலையில், விஜயா தாயன்பனின் மகள் தேவிகா ஸ்ரீதரன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மனோ தங்கராஜ், திமுக எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், ஆ.ராசா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், தேவிகா ஸ்ரீதரன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்த இரங்கல் செய்தி: ‘‘திமுக மகளிரணித் தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளருமான விஜயா தாயன்பன், மகள் தேவிகா ஸ்ரீதரன் அமெரிக்காவில் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
எங்களுடைய கடந்த சந்திப்பில் கூட, பாஸ்டன் மாகாணத்தில் வசிக்கும் தன்னுடைய மகளைச் சந்தித்து அளவளாவியதைப் பாசம் பொங்கச் சொல்லிப் பூரிப்படைந்தார். அத்தகைய மகளை இழந்து வாடும் விஜயா தாயன்பனுக்கும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.